திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை, முதுபெரும்தந்தை 2 ஆம் எரோணிமுஸ் சந்திப்பு
- Author குடந்தை ஞானி --
- Saturday, 11 Dec, 2021
ஏதென்ஸ் திருப்பீடத் தூதரகத்தில், டிசம்பர் 05 ஆம் தேதி ஞாயிறு உள்ளூர் நேரம் இரவு 7 மணியளவில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை பேராயர் 2 ஆம் எரோணிமுஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மரியாதைநிமித்தம் சந்தித்து, இத்திருத்தூதுப் பயணத்திற்கு நன்றி தெரிவித்தார். ஏறத்தாழ முப்பது நிமிடம் நடைபெற்ற இச்சந்திப்பில், இவ்விருவரும் விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்து
"புனித சபாஸ் திருநாளாகிய டிசம்பர் 5 ஆம் தேதி ஞாயிறு மாலையில், உரோம் திருஅவையின் எனது உடன்பிறப்பான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டிற்கு வருகை தந்ததற்கு நன்றி சொல்கிறேன். அவரது பயணம் நல்முறையில் அமைவதாக எல்லாம்வல்ல கடவுள் எம்மை ஆசீர்வதிப்பாராக". இவ்வாறு பேராயர் 2 ஆம் எரோணிமுஸ் அவர்கள் எழுதி, அப்புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
அதற்குப்பின்னர் திருத்தந்தையும் அப்புத்தகத்தில் கையெழுத்திட்டார். "மகிழ்ச்சி மற்றும் அமைதியில் எனது அன்புக்குரிய உடன்பிறப்பு 2 ஆம் எரோணிமுஸ் அவர்களைச் சந்திக்கிறேன். அவரது உடன்பிறப்பு உணர்வோடுகூடிய நன்மைத்தனம், தாழ்ச்சி, பொறுமை ஆகியவற்றுக்கு நன்றி. உடன்பிறப்பு உணர்வு மற்றும் அமைதியின் பாதையில் ஒன்றிணைந்து தொடர்ந்து நடக்க ஆண்டவர் எமக்கு அருள்புரிவாராக. ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு உதவுவதில் முதுபெரும்தந்தை பேராயர் 2 ஆம் எரோணிமுஸ் அவர்களது மனத்தாராளத்திற்கு நன்றி. இவ்விரு சகோதரிகள் திருஅவைகளையும், ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக, கடவுளின் அன்னையாம் புனித மரியா நமக்கு உதவுவாராக." இவ்வாறு திருத்தந்தை அப்புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் இவ்விருவரும் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக்கொண்டனர். 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆசியா மைனரில் கிரேக்கர்களின் துயரம்நிறைந்த வரலாறு என்ற ஒரு நூலையும், கிரேக்கப் புரட்சியில் இறந்தவர்கள் பற்றிய ஒரு நூலையும், ஓர் அருள்பணியாளர் சார்பாக, குழந்தை இயேசுவும் மரியாவும் உள்ள ஒரு திருவுருவத்தையும் முதுபெரும்தந்தை 2 ஆம் எரோணிமுஸ் அவர்கள் திருத்தந்தையிடம் கொடுத்தார். திருத்தந்தையும், இத்திருத்தூதுப் பயண நிகழ்வாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பதக்கத்தையும், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி பிரசுரிக்கப்பட்ட ஸ்டாடியோ ஓர்பிஸ்யும் முதுபெரும்தந்தைக்குப் பரிசாக அளித்தார். இச்சந்திப்போடு இஞ்ஞாயிறு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
Comment