No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

ஏதென்சின் மேகரான் இசை அரங்கத்தில் திருத்தந்தை திருப்பலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐந்து நாள்கள் கொண்ட தனது 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், மத்தியதரைக் கடலில் முத்தாக விளங்கும் சைப்பிரசு தீவு நாட்டிற்கு முதலில் சென்று, அங்கு இரு நாள்கள் பயண நிகழ்வுகளை முடித்து, கிரேக்க நாட்டிற்குச் சென்றார். கிரேக்க நாட்டில் திருத்தந்தை மேற்கொண்ட மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளாகிய டிசம்பர் 5 ஆம் தேதி ஞாயிறு காலையில் முதல் நிகழ்வாக, அந்நாட்டின் லெஸ்போஸ் தீவின் தலைநகரான மைத்திலின் நகருக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி திருத்தந்தை லெஸ்போஸ் தீவுக்குச் சென்றபோது, அவ்விடம், ஐரோப்பாவின் மிகப் பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அச்சமயத்தில் அம்முகாமில் ஏறத்தாழ இருபதாயிரம் புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அம்முகாம், 2020 ஆம் ஆண்டில் தீக்கிரையாகி, பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இஞ்ஞாயிறன்று திருத்தந்தை சென்ற மைத்திலின் நகரின் மோரியா புலம்பெயர்ந்தோர் முகாமில், மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ இரண்டாயிரம் புலம்பெயர்ந்தோர் உள்ளனர். தனித்தனி குடிசைகள் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் பத்து நிமிடங்களுக்கு மேலாகச் செலவழித்து அம்மக்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் கைகுலுக்கினார். தடுப்புத் தட்டிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த சிறார் மீதும் திருத்தந்தையின் கருணைப்பார்வைபட்டது. மத்தியதரைக் கடல் வழியாக அப்பகுதிக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோர், மைத்திலின் மையத்தில் வரவேற்கப்பட்டு, மோரியா முகாமில் வைக்கப்படுகின்றனர். இஞ்ஞாயிறு காலையில், இம்முகாமில் நடைபெற்ற நிகழ்வில் கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் கத்தரீனா அவர்கள் உட்பட முக்கிய அதிகாரிகளும் ஏறத்தாழ 200 புலம்பெயர்ந்தோரும் கலந்துகொண்டனர். அந்நிகழ்வில் திருத்தந்தை ஆற்றிய உரையில், புலம்பெயர்ந்தோர் மீது காட்டப்படும் புறக்கணிப்பு கடவுளைப் புண்படுத்துவது ஆகும், ஏழைகளைப் புறக்கணிக்கும்போது, அமைதியைப் புறக்கணிக்கின்றோம், புலம்பெயர்ந்தோருக்கு இழைக்கப்படும் இந்த கலாச்சாரச் சீரழிவை நிறுத்துவோம் என கெஞ்சிக் கேட்கிறேன் என்று திருத்தந்தை கூறினார்.

மேகரான் இசை அரங்கத்தில் திருப்பலி

டிசம்பர் 05 ஆம் தேதி ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 4.45 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் ஞாயிறு இரவு 8.15 மணிக்கு, ஏதென்ஸ் நகரின் மேகரான் இசை அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றினார். கிரேக்க நாட்டின் கலாச்சாரப் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் இந்த அரங்கத்தில், ஏதென்ஸ் நகரின் அனைத்து கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இங்கு இசை நூலகமும் உள்ளது. இந்த அரங்கத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், ஏறத்தாழ இரண்டாயிரம் கத்தோலிக்கர் பங்குகொண்டனர். இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை ஒன்றும், ஆற்றினார். இதிருப்பலியின் இறுதியில், ஏதென்ஸ் நகரின் இயேசு சபை பேராயரான தியாடோரஸ் கொன்டிதிஸ் அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார்.

பேராயர் தியாடோரஸ் கொன்டிதிஸ் அவர்களின் நன்றியுரை

திருத்தந்தையே, உமது பிரசன்னம், கிறிஸ்துவின் ஒரே உடலாக, உலகளாவியத் திருஅவையோடு ஒன்றிணையும் ஓர் உணர்வை எம்மில் ஏற்படுத்துகின்றது. எம் மத்தியில் வந்து எம்மோடு சேர்ந்து திருப்பலி நிறைவேற்றியதற்காக, என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன். தாங்கள் உலகளாவியத் திருஅவைக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி. தங்களது போதனைகள், இயேசுவைப் பின்செல்வதற்கு எம்மை ஊக்கப்படுத்துகின்றன. நற்செய்தியின் வழியில் இறைமக்களை நடத்திச்செல்ல, கடவுள் தங்களுக்குத் துணிவையும் ஒளியையும் தருமாறு செபிக்கின்றோம். இவ்வாறு பேராயர் தியாடோரஸ் கொன்டிதிஸ் அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார்.

திருத்தந்தையின் நன்றியுரை

திருத்தந்தையும், அந்நாட்டினரின் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்தார். கிறிஸ்தவர்களாகிய நமக்கு நன்றிகூறுதல் என்பது, நம் நம்பிக்கை மற்றும் வாழ்வின் மையமாக உள்ளது. நான் கிரேக்க நாட்டைவிட்டுச் சென்றாலும், உங்களைவிட்டுப் பிரியமாட்டேன். எனது நினைவிலும், செபத்திலும் நீங்கள் இருப்பீர்கள். எனக்காகத் தொடர்ந்து செபியுங்கள் என்று திருத்தந்தை, தனது நன்றியுரையில் கேட்டுக்கொண்டார். இத்திருப்பலியை நிறைவுசெய்து, திருத்தந்தை பிரான்சிஸ் ஏதென்ஸ் நகர் திருப்பீடத் தூதரகம் சென்றார்.

Comment