திருத்தந்தை பிரான்சிஸ்
இளையோர் சந்திப்பில் மூவர் வழங்கிய சாட்சியங்கள்
- Author குடந்தை ஞானி --
- Saturday, 11 Dec, 2021
டிசம்பர் 6 ஆம் தேதி திங்கள் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிரேக்க நாட்டிலிருந்து பயணமாவதற்கு முன், ஏதென்சு நகரில், ஊர்சுலைன் அருள்சகோதரிகள் நடத்திவரும் பள்ளியில் இளையோரைச் சந்தித்தார். அவ்வேளையில், திருத்தந்தைக்கு முன், மூன்று இளையோர் சாட்சியங்கள் வழங்கினர். முதலில், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா பின்பின் என்ற இளம்பெண் கூறிய சாட்சியத்தின் சுருக்கம்:
கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இருப்பினும், என் நம்பிக்கை அவ்வப்போது சோதிக்கப்படுகிறது. மற்றவர்களின் துன்பங்களைக் காணும்போது, ஏனைய மனிதர்களால் அடுத்தவர் துன்பங்களை அடையும்போது, என் நம்பிக்கை சோதனைக்கு உள்ளாகிறது.
இந்த பெருந்தொற்று காலத்திலோ, ஒரு முரண்பாடாக, என் நம்பிக்கை இன்னும் உறுதியடைந்தது. எங்கள் குழுமத்தில் இருந்த அருள்சகோதரி எம்மா அவர்களை இந்த நோயினால் இழந்தோம். இருப்பினும், நான் கடவுளை குறைகூறமால், அவருடன் பேச முடிந்தது. என் துன்ப நேரங்களில் கடவுள் எனக்களித்த வெளிச்சத்திற்கு நன்றி கூறுகிறேன். விவிலியத்திலிருந்தும் என்னால் ஆறுதலைப் பெறமுடிகிறது.
அடுத்து, கிரேக்க நாட்டின் டினோஸ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அயோனா விதாலி என்ற இளம்பெண் வழங்கிய சாட்சியத்தின் சுருக்கம்:
என் நம்பிக்கையை வளர்த்ததில், என் அன்னைக்கும், பாட்டிக்கும் பெரும் பங்கு உண்டு. அதற்கு அடுத்தபடியாக, ஊர்சுலைன் அருள்சகோதரி ஒருவர், பிறருக்கு வழங்குவதில் நான் வாழ்வின் மகிழ்வைக் காணமுடியும் என்று எனக்கு சொல்லித்தந்தார். இவர்களின் உதவியால் என் நம்பிக்கை வளர்ந்துவந்தது. வளர் இளம் பருவத்தில் வாழ்வில் நான் சந்தித்த துயரங்களால் என் இறை நம்பிக்கை வெகுதூரம் சென்றது. பல்கலைக்கழக தேர்வுகளின்போது, நான் உண்மையிலேயே அனைத்தையும் இழந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன். இறைவனை அலட்சியம் செய்து விலகிச்சென்றேன். இருப்பினும் ஒரு நாள் என் கனவில் கிறிஸ்துவைப் போன்றதொரு உருவத்தைக் கண்டேன். அவர் என்னிடம், "நீ என்னை அலட்சியப்படுத்தினாலும் எனக்கு கவலை இல்லை. நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்" என்று கூறியதை உணர்ந்தேன். அன்று முதல் இறைவனில் என் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. கடவுளின் உடனிருப்பைக் குறித்து ஏனைய இளையோருக்கு கூறுவதை ஒரு உறுதிமொழியாகக் கொண்டுள்ளேன்.
இறுதியாக, சிரியா நாட்டைச் சேர்ந்த அபோடு என்ற இளையவர் வழங்கிய சாட்சியத்தின் சுருக்கம்:
இரத்தக்கறை படிந்து, சிதைந்து போயிருக்கும் சிரியா நாட்டிலிருந்து நானும், என் 12 வயது தம்பி மாரியோவும் இங்கு வந்துள்ளோம். சிரியா நாட்டின் போர் துவங்கிய காலம் முதல் நான் கண்ட ஒரு சில புதுமைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அலெப்போ நகரில் மூன்று இடங்களில் வலிமைவாய்ந்த குண்டுவெடிப்பக்கள் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் நாங்கள் இருந்த அமைதியான பகுதியில் தீவிரவாதிகள் நுழைந்து எங்கும் சாவை விதைத்தனர். அப்போது எனக்கு வயது, 9. என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை.
2014 ஆம் ஆண்டு எங்கள் வீட்டுக்கு முன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. நாங்கள் அனைவரும் தரையில் வீழ்த்தப்பட்டோம், இருப்பினும், கடவுளின் புதுமையால் நாங்கள் உயிருடன் பிழைத்தோம். மீண்டும் அதே 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி எங்கள் பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்த அறையில் ஒரு வெடிகுண்டு வீழ்ந்து வெடித்தது. இருப்பினும் ஒரு புதுமையால், அவர்கள் உயிர் பிழைத்தனர்.
கிரேக்க நாட்டை அடைய மூன்று முறை படகு பயணம் மேற்கொள்ள முயன்றோம். இறுதியில் இந்நாட்டில் கரைசேர்ந்தோம். பல்வேறு இன்னல்களுக்கு இடையே, இதோ, நான் இன்று ஏதென்சு நகரில் உங்கள் நடுவே இருக்கிறேன். சமுதாயத்திற்கு உதவி செய்யும் ஒரு மனிதனாக வாழ விரும்புகிறேன். இறைவனுக்கு நன்றி. எங்களை வரவேற்று ஆதரவளித்த புனித யோசேப்பு சகோதரிகளுக்கு நன்றி.
Comment