No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

விமானப் பயணத்தில் செய்தியாளர்களுடன் சந்திப்பு

டிசம்பர் 6 ஆம் தேதி திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்பிரசு மற்றும் கிரேக்க நாடுகளில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, உரோம் நகருக்குத் திரும்பிவந்த விமானப் பயணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்கள் விடுத்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

சைப்பிரசு மற்றும் கிரேக்க நாடுகளில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், குடிபெயர்ந்தோர் குறித்த பிரச்சனைகள், ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் உடன்பிறந்த நிலை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கிறிஸ்மஸ் விடுமுறை என்ற சொல்லைக்குறித்து எழுப்பிய விவாதம் ஆகிய கருத்துக்கள் இந்தப் பகிர்வில் இடம்பெற்றன.

ஆர்த்தடாக்ஸ் சபையினரிடம் மன்னிப்பு கேட்டது

ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தந்தை, எரோனிமுஸ் அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்க திருஅவையின் சார்பில் மன்னிப்பு கேட்டது குறித்தும், ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் இணைந்து நடத்தக்கூடிய சந்திப்புகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு திருத்தந்தை முதலில் விளக்கம் அளித்தார்.

கிரேக்க நாடு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், கிரேக்க நாட்டில் வாழ்ந்த கத்தோலிக்கர்கள் அங்கிருந்த ஆர்த்தடாக்ஸ் சபையினருடன் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளையில், ஐரோப்பிய அரசுகளுடன் ஏனைய கத்தோலிக்கர்கள் இணைந்து, இந்த சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்தனர் என்பதால், கத்தோலிக்கர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டது சரியான ஒரு முடிவு என்று எடுத்துரைத்தார்.

கடவுள், எப்போதுமே, மன்னிப்பதற்கும், தன் கருணையைப் பொழிவதற்கும் தயாராக இருக்கிறார், ஆனால், நாமோ, மன்னிப்பு கேட்பதில் சோர்வடைகிறோம் என்பதை, இச்சந்திப்பில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மன்னிப்பு கேட்கும் பணிவு இன்றைய உலகில், அனைத்து தளங்களிலும் தேவைப்படும் ஒரு பண்பு என்று கூறினார்

சினடாலிட்டி குறித்த விளக்கம்

மாமன்றங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரே பாதையில் இணைந்து நடப்பது என்ற கருத்தை வலியுறுத்தும் சினடாலிட்டி என்ற அம்சம், அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் உள்ளது என்றும், அது கத்தோலிக்கத் திருஅவையில் திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அவர்களால் 54 அல்லது 56 ஆண்டுகளுக்கு முன்னரே உறுதிப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

கிறிஸ்மஸ் விடுமுறை என்ற சொல்லை நீக்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை விடுத்ததைக் குறித்து பேசிய திருத்தந்தை, இந்த முயற்சி, பல்வேறு அரசுகளால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சிதான் என்றும், இந்த முயற்சி, ஒருபோதும் வெற்றி அடைந்ததில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

குடியரசு சிதைந்து வருவது குறித்து கவலை

மேலும், இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு நாடுகளில் குடியரசு என்ற உன்னத விழுமியம் சிதைந்துவருவது குறித்து தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, மக்களை முன்னிறுத்தும் கொள்கை என்ற பெயரிலும், பெருமளவு மக்களின் விருப்பம் என்ற பெயரிலும் திணிக்கப்படும் அடக்குமுறை, குடியரசுக்கு எதிரான ஆபத்து என்பதையும் விளக்கிக் கூறினார்.

குடியேற்றம் குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவருமே இவ்வுலகில் குடியேறியவர்கள் என்பதையும், நாம் குடியேறிய வேளையில், அந்தந்த நாட்டில் நம்மையே இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் செய்ததை மறந்துவிட்டு, தற்போது, பல்வேறு நாடுகள் குடியேற்றத்தாரரைத் தடுக்க சுவர்கள் எழுப்புவது முரண்பாடாக தெரிகிறது என்று கூறினார்.

குடியேற்றதாரரைத் தடுப்பதற்குப் பதில், அவர்களை வரவேற்று, சமுதாயத்தோடு ஒருங்கிணைப்பதற்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதை விட்டுவிட்டு, அந்த நிதியைக் கொண்டு, சுவர்களும், வேலிகளும் எழுப்புவது, நிலையான பாதுகாப்பையும், அமைதியையும் கொணராது என்பதை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

கிரேக்க மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையினரினுடன் நிகழக்கூடிய சந்திப்பு குறித்தும், பாரிஸ் பேராயர் பணி விலகல் செய்வதாக அனுப்பிய விண்ணப்பத்தை தான் ஏற்றுக்கொண்டது குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த சந்திப்பில் ஒரு சில தெளிவுகளை கூறினார்.

Comment