No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்ற திருத்தந்தை

டிசம்பர் 7 ஆம் தேதி செவ்வாயன்று திருவருகைக் காலத்தையும், புனித யோசேப்பையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"தந்தைக்குரிய அன்புடன் நமக்காகப் பரிந்துபேசும் புனித யோசேப்பின் வழியாக, திருவருகைக் காலத்தில், நாம் ஆண்டவரிடம் கேட்போம்: இரவின் காவலர்களைப்போல் விழித்திருந்து, மிகவும் வறுமைப்பட்ட நம் சகோதரர்கள், சகோதரிகளில், கிறிஸ்துவின் ஒளியைக் காண்போம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி முதல், 6 ஆம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்பிரசு, மற்றும் கிரேக்க நாடுகளில் தன் 35வது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, உரோம் நகருக்குத் திரும்பியபின், தன் வழக்கப்படி, உரோம் நகரில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அன்னை மரியாவின் உருவப்படத்திற்குமுன் இறைவேண்டல் செய்தார்.

தன் இரண்டு மணி நேர விமானப் பயணத்தில் செய்தியாளர்களுடன் நேர்காணல் ஒன்றில் ஈடுபட்ட திருத்தந்தை, வத்திக்கானுக்குத் திரும்பும் வழியில், புனித மேரி மேஜர் பெருங்கோவிலில், உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன், செபத்தில் ஆழ்ந்து, தன் பயணம், தன சந்திப்புக்கள் மற்றும் அனைத்து நிகழ்வுகளுக்கு, அன்னைக்கு நன்றி செலுத்தினார்.

தன் விமானப் பயணத்தில், கிரேக்க நாட்டு அரசுத்தலைவர், கத்தரீனா அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய தந்திச் செய்தியில், அரசுத்தலைவரும், கிரேக்க நாட்டு மக்களும் தனக்கு வழங்கிய விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்ததோடு, அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் தன் இறைவேண்டலையும், ஆசீரையும் உறுதி அளித்தார்.

அதே வண்ணம், திருத்தந்தை திரும்பி வந்த விமானம், இத்தாலி நாட்டின் எல்லையில் நுழைந்ததும், இத்தாலிய அரசுத்தலைவ சர்ஜியோ மேட்ரெல்லா அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய தந்திச் செய்தியில், குடியரசு, உரையாடல் மற்றும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சி ஆகியவை குறித்து, தான் பேச முடிந்தது என்பதை திருத்தந்தை குறிப்பிட்டார்.

சைப்பிரசு மற்றும் கிரேக்க நாடுகளில் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அரசுத்தலைவர் சர்ஜியோ மேட்ரெல்லா அவர்கள் அனுப்பிய செய்தியில், இத்தாலிய மக்கள் சார்பில் வரவேற்பை வழங்கினார்.

தன் பணிக்காலம் முழுவதும் உரையாடலை ஊக்குவித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், மீண்டும் ஒருமுறை, இப்பயணத்தில், உரையாடல், மனித மாண்பு, குடியுரிமை ஆகிய அம்சங்களை வலியுறுத்தியதற்காக, அரசுத்தலைவர் சர்ஜியோ மேட்ரெல்லா அவர்கள், திருத்தந்தைக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.

Comment