திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தையைச் சந்தித்த சிரியா நாட்டு இளையோர்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 13 Dec, 2021
சைப்பிரசு மற்றும் கிரேக்க நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட 35வது திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்வுகளில் ஒன்றாக, அவர், சிரியா நாட்டைச் சேர்ந்த ஒன்பது இளையோரை, ஏதென்சு நகரில் உள்ள திருப்பீடத் தூதரகத்தில் சந்தித்தார். தன் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்வாக, இளையோருடன் மேற்கொண்ட சந்திப்பையடுத்து, தூதரகத்திற்குத் திரும்பிய திருத்தந்தையை, ஏதென்சு நகரில் ஆர்மீனிய கத்தோலிக்க மறைமாவட்டம் ஆதரித்து வரும் சிரியா நாட்டு புலம்பெயர்ந்தோர் ஒன்பது பேர் சந்தித்தனர்.
புலம்பெயர்ந்த இளையோரின் கடினமான வாழவைக் குறித்து இச்சந்திப்பில் கேள்வியுற்ற திருத்தந்தை, அவர்களுக்கு, சிறப்பான முறையில் ஆசீரளித்ததோடு, அவர்கள் தங்கள் வாழ்வுப்பயணத்தை நம்பிக்கையோடு தொடரும்படி கேட்டுக்கொண்டார். கடலில் நடந்த புனித பேதுரு, அலைகளில் மூழ்கியபோது, அவரை இயேசு தன் கரங்களை நீட்டி காத்ததைக் குறிப்பிடும் ஓவியம் வரையப்பட்ட சட்டைகளை அணிந்து வந்திருந்த இவ்விளையோர், அந்த சட்டைகளில் ஒன்றை, திருத்தந்தைக்கு நினைவுப்பரிசாக அளித்தனர்.
"இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை கொள்கிறேன். கடவுளின் கரம் எங்களைக் காத்தது. திருத்தந்தையே, நீரே, கடவுளின் கரமாய் இருக்கிறீர்" என்ற சொற்கள், இந்த ஓவியத்திற்கு கீழ் இத்தாலிய மொழியில் பதிவாகியிருந்தன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேரம் ஒதுக்கி, தங்களைச் சந்தித்ததைக் குறித்து, தங்கள் மகிழ்வை, வத்திக்கான் செய்தியோடு பகிர்ந்துகொண்ட இவ்விளையோர், திருத்தந்தை தங்களுக்கு பெரும் உந்துசக்தியாக விளங்குகிறார் என்றும் கூறினர்.
Comment