No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

விண்மீண் காட்டும் பாதையில் - பெண்மையைப் போற்றுவோம்

 அன்பானவர்களே, இன்று நாம் அமல உற்பவ அன்னையின் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றோம். ‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த மண்ணு மலரும்என்று சொல்வார்கள். அன்னை மரியா அமைந்த மனதுடன், “ஆம்என்று சொல்லி, கடவுளைத் தன் கருவறையில் ஏற்றுக்கொண்டதால் இந்தப் பூமி மலர்ந்தது. கடவுளுடனான  மரியாவின் உடனிருப்பு, காயப்பட்டுக் கிடந்த இந்தப் பூமியை குணமாக்கியது. அவரின் ஒப்புயர்வற்ற தியாகம் மனுக்குலத்திற்கு ஒரு மாபெரும் தாய் கிடைக்கக் காரணமாகியது. யாருடைய உதவியும் இல்லாமலேயே இவ்வுலகை மீட்கும் வல்லமை கடவுளுக்கு இருந்தும் கூட தனது மீட்புக் திட்டத்தில் அன்னை மரியாவுக்கு அவர் பங்களிக்கிறார். இதன்வழியாகப் பெண்ணினத்தை பெருமைப்படுத்துகிறார் கடவுள் என்பதை நாம் அறிகிறோம். இயேசுவின் மீட்புப் பாதையில் சீடர்களைக் காட்டிலும் மரியாவே அவரின் துன்ப துயரங்களை அதிகம் சுமந்து கொண்டார். இறுதிவரை இயேசுவோடு உடன் பயணித்தார்

இன்றும் நமது சமுதாயத்தில் குடும்பத்தின் பாரங்களை அதிகம் சுமப்பவள் ஒரு பெண்தானே! கருவறை முதல் கல்லறை வரை தன் குடும்பத்திற்காக ஓடாய் உழைத்துத் தேய்பவளும் ஒரு பெண்தான் என்பது நிதர்சனமான உண்மையல்லவாகுறிப்பாக, நோய் நொடிகள் சூழ்ந்த காலங்களில் நமக்கு உற்ற துணையாய் உடனிருந்து நம்மைக் காப்பவளும் தாய் என்னும் ஒரு பெண்தானே!  

அன்பர்களே, பெண்மையைப் போற்றுவதும், தாய்மையைக் காப்பதும், அவர்தம் அழுகுரலுக்குச் செவி மடுப்பதும், பெண்ணடிமைத்தனத்தைப் வீழ்த்த உதவ வேண்டியதும் நமது தலையாக் கடமைகளாக அமைகின்றன. திருவருகைக் காலத்தில் டிசம்பர் மாதம் எட்டாம் நாள் நாம் கொண்டாடும் அமல அன்னையின் பெருவிழாவும் இதனையே நமக்கு உணர்த்துகிறது. இதனை நேரிய உள்ளத்துடன் செயல்படுத்த இறைவன் நமக்கு அருள்வாராக!

Comment