திருத்தந்தை பிரான்சிஸ்
அடிப்படை உரிமைகளைப் புறக்கணிப்பது,மனிதமாண்பைப் புறக்கணிப்பதாகும்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 13 Dec, 2021
பல்வேறு சமுதாய மற்றும் பொருளாதார அமைப்புக்களில் நலிந்தோரின் மனித மாண்பும், அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட பணியாற்றுவதற்கு, நீதித்துறையில் பணியாற்றும் கத்தோலிக்கர் அழைக்கப்படுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளியன்று கூறினார்.
இத்தாலியக் கத்தோலிக்க நீதிபதிகள் கழகம், டிசம்பர் 9 ஆம் தேதி வியாழன் முதல், 11 ஆம் தேதி, சனிக்கிழமை முடிய, உரோம் நகரின் "அகஸ்டிநியனும்" பாப்பிறை இறையியல் கல்லூரியில் நடத்திவரும் எழுபதாவது தேசிய கருத்தரங்கில் பங்குகொள்கின்ற ஏறத்தாழ முன்னூறு பேரை, வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஆலோசகர், வழக்கறிஞர், நீதிபதி என, நீதித்துறையில் எந்தப் பணியை ஆற்றினாலும், அவர்கள், சமுதாயத்தில் குரலற்றோரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உடலளவிலும், மனத்தளவிலும் ஆன்மீக அளவிலும் பராமரிக்கப்படுவதற்கும், நியாயமான கூலிக்கும், மாண்புடைய வாழ்வுக்கும், உரிமைகள் புறக்கணிக்கப்படுவது, மனித மாண்பை புறக்கணிப்பதாகும் என்று கூறினார்.
"இறுதியானவர்கள்: வலுவற்ற மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு" என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது அண்மைய சைப்பிரசு மற்றும் கிரேக்க நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின்போது, லெஸ்போஸ் தீவின் மைத்திலினி நகரில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்தார்.
மற்ற எல்லாவற்றையும்விட மனிதரையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதில் ஐரோப்பியக் கண்டம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று, லெஸ்போஸ் தீவில், தான் கேட்டுக்கொண்டதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கத்தோலிக்க நீதித்துறையினர், வறியோரின் மனித மாண்பைக் காப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு கூறினார்.
பலவீனர்களின் உரிமைகள், பலவீனமான உரிமைகள் அல்ல என்று, கர்தினால் டியோநிகி டெட்டாமன்ஸி அவர்கள் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய கத்தோலிக்க நீதித்துறையினருக்குத் தன் ஆசீரை வழங்கியதோடு, தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டு, தன் உரையை நிறைவுசெய்தார்.
Comment