No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இத்தாலிய விமானப் படையினருக்கு திருத்தந்தை நல்வாழ்த்து

இத்தாலிய விமானப் படையினர் சிறப்பித்துவந்த லொரேத்தோ யூபிலி ஆண்டின் நிறைவாக, டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் ஏறத்தாழ 500 பேரைச் சந்தித்து வாழ்த்தினார். இவ்வெள்ளி மாலையில் இத்தாலியின் லொரேத்தோ அன்னை மரியா திருத்தலத்தில், திருஅவை இந்த யூபிலி ஆண்டை நிறைவுசெய்யவுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இந்நிகழ்வில் பங்குபெறும் அனைவருக்கும் தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

பழங்கால விவிலிய மரபுப்படி, ஒவ்வொரு யூபிலியும், நாம் இவ்வுலகில் பயணம் மேற்கொள்ளும் திருப்பயணிகள் என்பதையும், நாம் இப்பூமியின் முதலாளிகள் அல்ல, மாறாக, கடவுள் நம்மை வைத்திருக்கும் இப்பூமி என்ற தோட்டத்தைப் பயிரிட்டு பாதுகாக்கவேண்டியவர்கள் என்பதையும், நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை கூறினார்.

1920 ஆம் ஆண்டில் திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட் அவர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை, "விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக" அறிவித்ததன் நூறாம் ஆண்டு யூபிலி, கடவுள் விண்ணகத்தையும் நமக்காக உருவாக்கினார் என்பதையும், விண்ணை நாம் தியானிக்கும்போது, அது எல்லையற்ற இடங்களை நமக்குத் திறந்து வைக்கின்றது, மற்றும், நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதையும் உணரச்செய்து இந்த புவியைப் படைத்தவரை நினைக்க வைக்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

பொருளியல் அர்த்தத்தில் அல்ல, மாறாக, எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீக அர்த்தத்தில் நாம் பறப்பதற்கு ஆக்கப்பட்டுள்ளோம் என்றும், நான் தூயவராய் இருப்பதுபோல நீங்களும் தூயவராய் இருங்கள் என்று, இறைத்தந்தை தம் பிள்ளைகளாகிய நம்மிடம் கூறுகிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, இது, தன்னலத்திற்கு இடம்கொடாது, உயரே பறங்கள் எனக் கூறுவதாக உள்ளது எனத் தெரிவித்தார்.  

இது, மிகுந்த தாராளம், பெருந்தன்மை, தொண்டு ஆகிய பண்புகளோடு கடவுளுக்கும், மற்றவருக்கும் நம்மையே திறப்பதற்கு இட்டுச் செல்கிறது எனவும், அந்நிலையில் நம் வாழ்வு, விண்ணை நோக்கிச் செல்லும் எனவும் திருத்தந்தை கூறினார்.

ஒவ்வொரு நாளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் விமான ஓட்டுனர்கள், இந்த விழுமியங்களுக்கு வாழ்வில் இடமளிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, விமான ஓட்டுனர்கள் அமைதியை உருவாக்குபவர்கள், இவர்கள், உயரே பறத்தல் என்பது, விண்ணிலும் மண்ணிலும் வீட்டிலும், மற்ற இடங்களிலும், போர்த்தளங்களிலும் அமைதிக்குப் பணியாற்றுபவர்கள் என்று அர்த்தமாகும் என்று கூறினார்.

நாம் எங்கே இருந்தாலும், நம் கிறிஸ்தவ வேர்களைப் பாதுகாக்கும் ஓர் இல்லம் நமக்கு உள்ளது என்பதையும், நம்மைப் பாதுகாக்கும் ஓர் அன்னை இருக்கிறார் என்பதையும்  லொரேத்தோ அன்னை மரியா புனித இல்லம் நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இல்லம் என்பது திருஅவை மற்றும் அன்னை என்பவர் மரியா எனவும், இந்த அன்னையிடமிருந்து விண்ணகத்திற்கு இட்டுச்செல்லும் தாழ்ச்சியை கற்றுக்கொள்கிறோம் என்று எடுத்துரைத்தார்.

லொரேத்தோ யூபிலி ஆண்டு

லொரேத்தோ யூபிலி ஆண்டு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி முதல், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. பழங்கால மரபுப்படி, இத்தாலியிலுள்ள லொரேத்தோ பெருங்கோவிலின் புனித வீட்டை, புனித பூமியின் நாசரேத்திலிருந்து வானதூதர்கள் தூக்கி வந்தனர் என்றும், இதனால் தூண்டப்பட்டு, முதல் உலகப் போரில் விமான ஓட்டுனர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை தங்கள் பாதுகாவலராகக் கொண்டனர் என்றும், அந்தக் காலத்தில், விமானங்கள், பறக்கும் வீடுகள் என அழைக்கப்பட்டன என்றும் கூறப்படுகின்றது.

1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி, திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட் அவர்கள், லொரேத்தோ அன்னை மரியாவை, விமான ஓட்டுனர்களின் பாதுகாவலராக அறிவித்தார். அதற்கு மூன்று ஆண்டுகள் சென்று, 1923 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி, இத்தாலிய விமானப்படை உருவாக்கப்பட்டது.

Comment