திருத்தந்தை பிரான்சிஸ்
அனைவரின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட பணியாற்றுவோம்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 13 Dec, 2021
ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதற்கு துணிச்சலோடு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளியன்று அழைப்பு விடுத்தார்.
டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரின், குறிப்பாக, நம் கண்களுக்கு மறைவாய் உள்ளவர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதற்கு, துணிச்சலோடும், தீர்மானத்தோடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, அதில் பதிவுசெய்துள்ளார்.
பசித்திருப்போர், தாகமாயிருப்போர், ஆடையின்றி இருப்போர், நோயாளிகள், அந்நியர், கைதிகள், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளோர் அல்லது புறக்கணிக்கப்பட்டோர் போன்றோரே, நம் கண்களுக்கு மறைவாய் உள்ளவர்கள் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பேராயர் ஜொர்தானோ, திருஅவையின் அன்புக்குச் சாட்சிபகர்ந்தவர்
இம்மாதம் 2 ஆம் தேதி இறைபதம் அடைந்துள்ள, நுரு எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் ஆல்தோ ஜொர்தானோ அவர்களின் ஆன்மா நிறையமைதி அடையுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் இறைவேண்டல் செய்துள்ளார்.
பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் ஜொர்தானோ அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் தாக்கப்பட்டு, இரு மாதங்களாக, புருசெல்லஸ் நகரின் மருத்துவமனை ஒன்றில் பெற்றுவந்த சிகிச்சை பலனின்றி, இம்மாதம் 2 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். அவரது உடல், டிசம்பர் 9 ஆம் தேதி வியாழனன்று, அவரது சொந்த ஊரான இத்தாலியின் சினோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பேராயர் ஜொர்தானோ அவர்களின் நல்லடக்கச் சடங்கில் கலந்துகொண்ட திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பேராயர் ஜொர்தானோ அவர்களின் இறப்பால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் திருத்தந்தையின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் செய்தியை வாசித்தார்.
பேராயர் ஜொர்தானோ அவர்கள், மிகத் தாழ்மையும், மனத்தாராளமும்கொண்ட திருஅவையின் ஒரு மனிதராக, அருள்பணித்துவ வாழ்வை மிகுந்த ஆர்வமாகவும் திருஅவையின் எல்லையற்ற அன்புக்குச் சாட்சியாகவும் வாழ்ந்தவர் என்று, திருத்தந்தை அவரைப் பாராட்டியுள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் வெனெசுவேலா நாட்டில் திருப்பீட தூதராகப் பணியாற்றிவந்த பேராயர் ஜொர்தானோ அவர்கள், 2021 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிவந்தார்.
Comment