No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

தென் சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருடன் அருகாமை

தென் சூடானில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருடன், தன் அருகாமையை வெளிப்படுத்தும் விதமாக, டிசம்பர் 08 ஆம் தேதி புதனன்று சிறப்பிக்கப்பட்ட அமல அன்னை பெருவிழாவன்று, அந்நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் அயோனுட் பால் ஸ்டிரிஜாக் அவர்கள் வழியாக, முப்பதாயிரம் டாலர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் நன்கொடையாக அனுப்பியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வழியாக, தென் சூடானின் மலாக்கல்  மறைமாவட்டத்திற்கு, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில், 75 ஆயிரம் டாலர்களை திருத்தந்தை அனுப்பியுள்ளவேளை, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் கொனார்டு கிராஜியுஸ்கி அவர்கள், கூடுதலாக முப்பதாயிரம் டாலர்களை அனுப்பியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் சூடானில் இந்த இயற்கைப் பேரிடரால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் படுக்கைகள், விரிப்புகள், குடிசைகள் போன்றவைகளை வாங்குவதற்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, பென்டியுல், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில், ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அம்மக்கள், அறுவடைக்காக தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்குத் தயாரித்துக் கொண்டிருந்தவேளையில், வெள்ளத்தால் அவர்கள் மீண்டும் முகாமிலேயே தங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தற்போது இம்முகாமில் கூடுதலாக ஐம்பதாயிரம் பேர் உள்ளனர்.

Comment