குடந்தை ஞானி
அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழியமைக்கப்படவேண்டும்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 21 Dec, 2021
கோவிட்-19 பெருந்தொற்றால் இவ்வுலகினர் எதிர்கொண்டுள்ள அனுபவங்கள், நாம் அனைவரும் ஒரே மனிதக் குடும்பம் மற்றும், சகோதரர் சகோதரிகளுக்கு நாம் எல்லாருமே பொறுப்பு என்ற உண்மையை, உலக சமுதாயம் அதிகமதிகமாக உணரும் என்று, தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் தூதர்கள் குழு ஒன்றிடம் டிசம்பர் 17ஆம் தேதி வெள்ளியன்று கூறினார்.
இந்த உண்மை, தற்போதைய நலவாழ்வு நெருக்கடியை மட்டுமல்ல, ஏழ்மை, புலம்பெயர்வு, பயங்கரவாதம், காலநிலை மாற்றம் போன்ற மனித சமுதாயத்தையும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தையும் கடுமையாய்ப் பாதித்துள்ள அனைத்துப் பிரச்சனைகளையும், தோழமையுணர்வில் எதிர்கொள்ள நம்மை வலியுறுத்துகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
மோல்டோவா, கிர்கிஸ்தான், நமீபியா, லெசோத்தோ, லக்சம்பர்க், சாட், கினி பிஸ்ஸாவ் ஆகிய ஏழு நாடுகளிலிருந்து திருப்பீடத்தின் தூதர்களாகப் பணியாற்ற புதிதாக நியமனம் பெற்றுள்ளவர்களை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு எடுத்துரைத்தார்.
மனித சமுதாயத்தின் பொதுநலனுக்கு, சேவை மனப்பான்மை, தியாகம் மற்றும் தாராளத்தோடு சிறப்பாக பணியாற்ற, கோவிட் பெருந்தொற்று, தனிமனிதரையும், சமுதாயத்தையும் தூண்டியுள்ள அதேவேளை, இது, சந்திப்புக் கலாச்சாரத்தையும் நம்மில் ஊக்குவிக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இந்தப் பணியில், நாடுகளின் தூதர்களாகிய உங்களின் முக்கியமான பங்கை திருப்பீடம் மதிக்கின்றது என்றும், உங்களின் பணி பலநேரங்களில் ஆரவாரமின்றியும், பொது மக்களின் அங்கீகாரம் கிடைக்காமலும் ஆற்றப்படுகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, உலகின் தேவை என்ன என்பதை, பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடியிலிருந்து நீங்கள் ஏற்கனவே புரிந்திருக்கிறீர்கள் என்றும், அத்தூதர்களிடம் எடுத்துரைத்தார்.
நீதி நிறைந்த உலகை ஒன்றிணைந்து கட்டியெழுப்பும்வண்ணம், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்புலங்கள்கொண்ட மக்கள், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதையும், நட்புறவைப் பேணி வளர்ப்பதையும் ஊக்குவிக்கவேண்டிய அவசியத்தை, பெருந்தொற்றிலிருந்து கற்றுக்கொண்டுள்ளோம் எனவும் கூறியத் திருத்தந்தை, அரசியல் தூதர்கள் தங்களின் இப்பணிகளை மேற்கொள்ள, உரையாடல் ஒரு கருவியாக உள்ளது என்று கூறினார்.
கடந்த ஆண்டில் இதே நிகழ்வுக்காக அரசியல் தூதர்களைச் சந்தித்தபோது, பெருந்தொற்று பரவல் ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையின் அடையாளம் தெரிந்தது என்றும், அதனை மேலும் பரவவிடாமல் தடுப்பதிலும் முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் கூறிய திருத்தந்தை, அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழியமைப்பதற்கு, உலக சமுதாயம் கூடுதலாக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும், இது நீதி சார்ந்த விவகாரம் என்றும் கூறினார்.
Comment