No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள், துறவிகளுக்கு காட்டுகின்ற உண்மையான பாதை, தாழ்ச்சி

இறையழைத்தல்கள் குறைந்தும், அதேநேரம், திருத்தூதுப் பணிகள் மாற்றம் கண்டுவரும் இக்காலக்கட்டத்தில், கடவுள் துறவிகளுக்குக் காட்டுகின்ற உண்மையான பாதை, தாழ்ச்சி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபை துறவியரிடம் கூறினார்.

இம்மாதம் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, கிரேக்க நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில், முதல் நாள் மாலையில், ஏதென்ஸ் திருப்பீடத் தூதரகத்தில் திருத்தந்தை, இயேசு சபை துறவிகளோடு ஏறத்தாழ ஒரு மணி நேரம் உரையாடியதை, இயேசு சபையினரின் லா சிவில்த்தா கத்தோலிக்கா என்ற இதழ் வெளியிட்டுள்ளது.

அன்றைய நாளில், கிரேக்க நாட்டில் மறைப்பணியாற்றும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒன்பது இயேசு சபைத் துறவியரில் ஏழு பேரை, அதே இயேசு சபையைச் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் தன்னிடம் கேட்கவிரும்பும் கேள்விகளைக் கேட்கலாம் என்றும், தங்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்   என்றும் கூறினார்.

அருள்சகோதரர்களிடமிருந்து கிடைக்கும் உள்தூண்டுதல்

இந்நிகழ்வில் முதலில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட இயேசு சபை அருள்சகோதரருக்குப் பதிலளித்த திருத்தந்தை, அர்ஜென்டீனாவில் இயேசு சபை மாநிலத் தலைவராக, தான் பணியாற்றியபோது, ஒரு பயிற்சி மாணவரை, அருள்பணித்துவ வாழ்வுக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து தீர்மானிக்கவேண்டியிருந்தது என்று கூறினார்.

அந்த பயிற்சி மாணவர், திறமையானவராக, வாழ்க்கையில் வெற்றி பெறுபவராகத் தெரிந்தார், இருந்தபோதிலும், அவருக்கு அருள்பணித்துவ திருப்பொழிவு வழங்கப்படுவதற்குமுன், திருத்தூதுப் பணியாற்ற சிலகாலம் அனுப்புமாறு அருள்சகோதரர் ஒருவர் தன்னிடம் கூறியதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, வாழ்வின் உண்மையான இயல்பை, அருள்சகோதரர்கள் கண்டுகொள்ளும் திறமையைக் கொண்டிருப்பதன் காரணம் பற்றி சிந்தித்தேன் என்றும் கூறினார்.      

மேலும், இச்சந்திப்பில் பங்குபெற்ற, கொரியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இயேசு சபைத் துறவி ஒருவர் பற்றிக் கூறுகையில், இவர், ஏதென்சில் புலம்பெயர்ந்த சிறாருக்கென்று மையத்தை உருவாக்கியவர், ஆனால் அவர் தற்போது அம்மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகின்றார் என்றும், அனைத்து இயேசு சபையினரும் இவ்வாறே செயல்படவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

எந்த ஒரு திருத்தூதுப் பணியும் நமக்கு உரியது கிடையாது, ஏனெனில் அது ஆண்டவருடையது என்றும், திருத்தூதுப் பணியாற்றும் ஒவ்வொருவரும், தந்தையாக இருந்து, பிள்ளைகள் வளர அனுமதிக்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, வயது முதிர்ந்த துறவி ஒருவர், கிரேக்க நாட்டில் இயேசு சபையினரின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது, அதேநேரம், பல்வேறு திருத்தூதுப் பணிகள் அதிகரித்து வருகின்றன என்று  கூறியதற்குப் பதிலளித்தார்.

1958 ஆம் ஆண்டில் தான் நவதுறவு இல்லத்தில் இருந்தபோது, உலக அளவில் இயேசு சபையில், 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர், தற்போது அவ்வெண்ணிக்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

துறவிகளாகிய நமக்கு, கடவுள் செய்தி ஒன்றைச் சொல்கிறார், அதுவே தாழ்ச்சி எனவும், புனித இஞ்ஞாசியார், தன் ஆன்மீகத் தியானத்தில் தாழ்ச்சி மற்றும் அவமானப்படுத்தப்படல் பற்றிப் பேசியிருக்கிறார், நாமும் அவமதிக்கப்பட நம்மையே அனுமதிக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

Comment