குடந்தை ஞானி
இந்தியாவில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முதல்நிலை தயாரிப்புகள்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 21 Dec, 2021
2023 ஆம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முதல்நிலை தயாரிப்புகள், மறைமாவட்ட அளவில் இடம்பெற்றுவரும்வேளை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுநிலையினர் ஆணைக்குழு, இந்தியத் திருஅவையில் நடைபெறவுள்ள அத்தயாரிப்புகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டின் 174 கத்தோலிக்க மறைமாவட்டங்கள் மற்றும் 14 மாநில அவைகளில் பொதுநிலை அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று, அக்குழுவின் செயலர், செவாலியர் வி.சி.செபஸ்தியான் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை குறித்து யூக்கா செய்தியிடம் விளக்கியுள்ள செபஸ்தியான் அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்களில் எல்லாநிலைகளிலும் இருக்கின்ற இறைமக்கள் அனைவரிடமிருந்து, திருஅவையின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கேட்பது கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் இதுவே முதன்முறை என்றும் கூறியுள்ளார்.
உலகெங்கும் கத்தோலிக்க மறைமாவட்டங்கள் நடத்தவுள்ள இந்த தயாரிப்புகளுக்கு உதவியாக, இவ்வாண்டு அக்டோபர் 17 ஆம் தேதியன்று பொதுநிலையினர் திருப்பீட அவை, வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது என்றுரைத்த செபஸ்தியான் அவர்கள், அனைத்து இறைமக்களின் பரிந்துரைகள் மற்றும் பகிர்வுகளின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையை மூன்றாவது ஆயிரமாம் ஆண்டுக்குள் அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவைக்காக: ஒருங்கிணைப்பு, பங்கேற்பு மற்றும் மறைப்பணி” என்ற தலைப்பில், வத்திக்கானில், 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் 16வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவிருக்கிறது. அதற்கு மூன்று நிலைகளில் தயாரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.
Comment