No icon

குடந்தை ஞானி

மியான்மாரில் கொண்டாட்டம் இல்லாத கிறிஸ்மஸ்

மியான்மாரில் இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியன்று இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழா, அமைதி, இறைவேண்டல் மற்றும் தோழமையுணர்வில் ஆடம்பரமின்றி சிறப்பிக்கப்படும் என்று, அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தி கூறுகின்றது.

அந்நாட்டில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால், காடுகளுக்குச் சென்று வாழ்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், கெரில்லாப் போர், வன்முறை, கொலைகள் போன்றவற்றாலும், கடும் நெருக்கடிகளை, மக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர் என்று ஆயர்களின் செய்தி கூறுகின்றது.

இந்நிலையால் கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள், ஏழைகள் போன்றவர்களோடு, மியான்மார் கத்தோலிக்கர் தோழமையுணர்விலும், இறைவேண்டலிலும், அமைதியிலும், கடவுள், மனிதராகப் பிறந்ததைச் சிறப்பிக்கும் பெருவிழாவன்று, வாழ்வார்கள் என்று அக்கிறிஸ்மஸ் செய்தி உரைக்கின்றது.

"மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்" (உரோ.12:15) என்று புனித பவுல் உரோமையருக்கு எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, கிறிஸ்மஸ் செய்தி வெளியிட்டுள்ள, மியான்மாரின் யாங்கூன், மாண்டலே, பாத்தியென், பியாய் உள்ளிட்ட பல மறைமாவட்ட ஆயர்கள், துயருறுவோடு தோழமையுணர்வை வெளிப்படுத்துமாறு, கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற மியான்மாரின் மேற்கிலுள்ள சின் மாநிலம், கிழக்கிலுள்ள காயா மாநிலம் போன்றவற்றில், ஆயிரக்கணக்கான மக்கள்காடுகளிலும் முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாநிலங்களின் ஆலயங்களில் நிறைவேற்றப்படும் கிறிஸ்மஸ் திருப்பலி வழியாக, "கடவுள் இம்மானுவேலராய், நம்மோடு இருக்கிறார்" என்ற ஆறுதல் உணர்வை கத்தோலிக்கரில் ஏற்படுத்தவுள்ளோம் என்று, ஆயர்கள் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

மியான்மாரில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள ஏறத்தாழ 2 இலட்சம் மக்களுக்கு, தேசிய காரித்தாஸ் அமைப்பும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனமும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்படாதநிலையில், கிறிஸ்மஸ் காலத்தில், கத்தோலிக்கர் அனைவரும் பிறரன்புச் செயல்களில் ஈடுபடுமாறும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comment