No icon

குடந்தை ஞானி

எத்தியோப்பியாவில் உரையாடல் வழியாக தீர்வு காண அழைப்பு

எத்தியோப்பியா நாட்டில், ஓராண்டுக்கு மேலாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரினால் துன்புறும் மக்களோடு, குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள மக்களோடு, தன் ஆன்மீக அருகாமை, இறைவேண்டல், மற்றும் தோழமையுணர்வை திருப்பீடம்வெளிப்படுத்தியுள்ளது.

அப்பாவி குடிமக்களுக்கு எங்கெங்கு அடிப்படை மற்றும் இன்றியமையாத உதவிகள் தேவைப்படுகின்றனவோ, அங்கெல்லாம் மற்றும் அவற்றையெல்லாம் அளிக்குமாறு, எத்தியோப்பியாவில் போரிடும் தரப்புகள் அனைத்தையும் திருப்பீடம்விண்ணப்பித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் .நா. மனித உரிமைகள் அவையின் 33வது அமர்வில், டிசம்பர் 17 ஆம் தேதி வெள்ளியன்று, நெருக்கடிநிலைகளை எதிர்கொண்டுவரும் எத்தியோப்பியா பற்றி நடைபெற்ற கருத்துப் பகிர்வில் உரையாற்றிய பேரருள்திரு ஜான் புட்சர் அவர்கள், அந்நாட்டு மக்கள் மீது திருப்பீடம் கொண்டுள்ள அக்கறையை எடுத்துரைத்தார்.    

எத்தியோப்பியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பதட்டநிலைகளுக்கு, உடன்பிறப்பு உணர்வில் உரையாடலை மேற்கொண்டு, அந்நாட்டிற்கு அதிகம் தேவைப்படும் அமைதிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று, திருப்பீடம் நம்புவதாகவும், ஜெனீவாவிலுள்ள .நா. அமைப்புக்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேரருள்திரு புட்சர் அவர்கள் கூறினார்.

அமைதிக்காக மேற்கொள்ளப்படும் பாதை, மோதல்கள் முடிவுக்குக்கொணரப்படவும், உடன்பிறப்பு உணர்வின் அழகை வெளிப்படுத்தவும் உதவும் என்று, திருத்தந்தை, சைப்பிரசு தீவு நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின்போது கூறியதையும், பேரருள்திரு புட்சர் அவர்கள் எடுத்துரைத்தார்.

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் இராணுவத்திற்கும், திக்ரே மக்கள் விடுதலை முன்னணி புரட்சி அமைப்பிற்கும் இடையே இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது இருபது இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். மேலும், ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்கள், பசி, வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களால் துன்புறுகின்றனர். திக்ரே அமைப்பு, 2020 ஆம் ஆண்டு நவம்பரில் தனி நாடு கேட்டு, தன் போராட்டத்தைத் துவக்கியது. 1994 ஆம் ஆண்டு எத்தியோப்பியா, இனவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் திக்ரே என்பது குறிப்பிடத்தக்கது.

Comment