திருத்தந்தை பிரான்சிஸ்
மதத் துன்புறுத்தல்களைச் சந்திப்பவர்களுக்காக இறைவேண்டல்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Tuesday, 11 Jan, 2022
2022 ஆம் ஆண்டிற்கான தனது முதல் இறைவேண்டல் கருத்தை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராகப் போரிடுவதற்காக அதனை அர்ப்பணித்துள்ளார்.
ஜனவரி 4 ஆம் தேதி, செவ்வாயன்று வெளியிட்ட தனது ஜனவரி மாத இறைவேண்டல் கருத்தில், மக்கள் தங்கள் நம்பிக்கையை பகிரங்கமாக அறிவிப்பதால் அவர்களைத் துன்புறுத்துவது என்பது மனிதாபிமானமற்றது மற்றும் பைத்தியக்காரத்தனம் என்று தெரிவித்துள்ள திருத்தந்தை, தற்போது பல மதச் சிறுபான்மையினர், பாகுபாடு அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது எப்படி சாத்தியம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்,
மதச் சுதந்திரம் என்பது வழிபாட்டுச் சுதந்திரத்துடன் கட்டுப்படுத்தப்பட்டதல்ல; மாறாக, இது உடன்பிறந்த உணர்வுநிலையுடன் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத வேறுபாடுகள் போன்ற முக்கிய வேறுபாடுகள் கூட, சகோதர சகோதரிகளாக இருப்பதன் பெரும் ஒற்றுமையை பாதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மதச் சுதந்திரத்துடன் கட்டுப்படாத நிலையில் வழிபாட்டுச் சுதந்திரம் என்பது பல்வேறு மத வேறுபாடுகளைக் கொண்ட மக்களைப் பாராட்டவும், அவர்களை உண்மையான சகோதர சகோதரிகளாக அங்கீகரிக்கவும் செய்கிறது என்றும் தெரிவித்தார்.
திருத்தந்தையின் இம்மாத இறைவேண்டல் கருத்தை ஆதரிக்கும், தேவையில் இருக்கும் தலத்திரு அவைகளுக்கு உதவும் கத்தோலிக்க அறக்கட்டளை அமைப்பானது, உலகளவில், மூன்று நாடுகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மதச் சுதந்திரம் மீறப்படுகிறது என்றும், இது மொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியுள்ளது என்றும், உலகில் மதச் சுதந்திரம் என்ற தனது ஆண்டறிக்கையில் குறிப்பிடுகிறது. மேலும், 646 மில்லியனுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், மதச் சுதந்திரத்தை மதிக்காத நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் ACN அறிக்கை தெரிவிக்கின்றது.
Comment