குடந்தை ஞானி
லைபீரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 கிறிஸ்தவர்கள் உயிரழப்பு
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jan, 2022
ஜனவரி 19 ஆம், புதன் இரவு, லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், காவல் துறை செய்தித் தொடர்பாளர் மோசஸ் கார்ட்டர் அவர்கள் AFP செய்தி அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
லைபீரியாவில் உழைக்கும் வர்க்கத்தினர் வாழும் புறநகர்ப் பகுதியான நியூ க்ரு நகரிலுள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டத்தில், இச்சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கூட்டங்கள் பொதுவாக லைபீரியாவில் ஆயிரக்கணக்கான மக்களை கூட்டுகின்றன என்றும், பெரிய கிறிஸ்தவ நாடாகக் கருதப்படும் லைபீரியாவில் வாழும் ஐந்து மில்லியன் மக்களில் பெரும்பான்மையினோர் கிறிஸ்தவர்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
பிரபல மத போதகரான ஆபிரகாம் க்ரோமா, நியூ க்ரு நகரின் இரண்டு நாள் கொண்ட வழிபாட்டு நிகழ்வை நடத்தி பெரும் கூட்டத்தைக் கூட்டியபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருந்தவர்களைக் கத்திகளை ஏந்திய கொள்ளையர்கள் தாக்கியதாகவும், இது கூட்ட நெரிசலை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் பழமையான குடியரசான லைபீரியா, 1989 முதல் 2003 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர்களுக்குப் பிறகு மீண்டெழுந்து வரும் ஒரு வறிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
Comment