குடந்தை ஞானி
உலகளவில் கிறிஸ்தவர்களுக்கெதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள்
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jan, 2022
ஜனவரி 19 ஆம் தேதி, புதன்கிழமை அன்று, ஓப்பன் டோர்ஸ் இன்டர்நேஷ்னல் அமைப்பு 2022-உலக கண்காணிப்பு பட்டியல் (WWL) ஒன்றை வெளியிட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாகக் கொண்ட இந்த மதச்சார்பற்ற அமைப்பு, அதன் 2022-உலக கண்காணிப்பு பட்டியலில், கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கைக்காக மிக மோசமான துன்புறுத்தலை அனுபவிக்கும் முதல் 50 நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது.
அதன்படி, 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல், 2021 ஆம் தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி, வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய கணக்கெடுப்பில், குறிப்பாக, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும், COVID-19 தொற்றுநோய் பாகுபாட்டை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
இதுகுறித்து முழுமையாகப் பகுப்பாய்வு செய்துள்ள, மதச் சுதந்திரத்திற்கான சர்வதேச நிறுவனம் (IRF), 36 கோடிக்கும் அதிகமான மக்கள் (அதாவது உலகளவில் 7 இல் 1 பேர்), கடந்த ஆண்டு தங்கள் நாட்டில் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளை அனுபவித்தனர் என்று எடுத்துக்காட்டுகிறது.
மேலும், ஒட்டுமொத்தமாக, 5,898 கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், 5,110 வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதாகவும் அல்லது மூடப்பட்டதாகவும், 6,175 கிறிஸ்தவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டதாகவும், மற்றும் 3,829 பேர் கடத்தப்பட்டதாகவும் புள்ளிவிபரங்களுடன் தெரிவிக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாகவும், நைஜீரியா மற்றும் இந்தியாவில் வன்முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் கூறும் இப்பட்டியல், இத்தகைய வன்முறைச் செயல்களால் கிறிஸ்தவர்கள் கட்டாய இடம்பெயர்தலுக்கு உள்ளாகி வருவதோடு, தாக்குதல்களால் கிறிஸ்தவப் பெண்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று மேலும் தெரிவிக்கிறது.
Comment