No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருப்பேராயத்தின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளியன்று திருப்பீடத்தில் நடைபெற்ற விசுவாசக் கோட்பாட்டு திருப்பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையில், மனித மாண்பு, தெளிந்து தேர்தல் மற்றும் நம்பிக்கை ஆகிய மூன்று விடயங்களைக் குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்

முதலாவதாக, மனித மாண்பு குறித்து பேசும்போது, ஒவ்வொரு மனிதனின் மாண்பை அங்கீகரிப்பதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள சகோதரத்துவத்திற்கான விருப்பத்திற்கு, நாம், அனைவருக்கும் புத்துயிர் அளிக்கலாம் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும், சகோதரத்துவம் என்பது, மனிதகுலத்தின் பயணத்திற்கான படைப்பாளரான கடவுள் வடிவமைத்த இலக்காக இருக்குமேயானால், அந்த முக்கிய இலக்கு அங்கீகரிப்பதுதான் ஒவ்வொரு மனிதரின் மாண்பாகும் என்றும் எடுத்துக்காட்டினார்.

தொடக்கத்திலிருந்தே திருஅவை மனித மாண்பை மதித்துப் போற்றி வருகிறது என்றும், மனிதர் கடவுளின் உயர்ந்த படைப்பாகவே போற்றப்படுகிறரர் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மனித மாண்பை நிலைநிறுத்தவும், அதனின் மாபெரும் அடையாளமாக விளங்கும் மனிதரை மீட்கவுமே, இயேசு தனது இன்னுருயிரைச் சிலுவையில் ஈந்தார் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டாவது கருத்தாக, தெளிந்து தேர்தல் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, பல்வேறு மாற்றங்களைக் கண்டுவரும் இவ்வுலகில், கடவுளுக்கு உகந்த செயல்கள் எவை என்பதை சரியான முறையில் தெளிந்து தேர்ந்திட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்றும், எல்லாவித முறைகேடுகளுக்கும் எதிராகப் போராடுவதில் திருஅவையானது தெளிந்து தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது என்றும் கூறினார்.

மூன்றாவது கருத்தாக, நம்பிக்கைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, பொய்யான மற்றும் போலியான முறையில் அல்லாமல், வாழ்வின் உயர்ந்த விழுமியங்களை உள்ளடக்கிய உண்மையான மற்றும் உள்ளதை உள்ளவாறு கூறும் நம்பிக்கை நம்மில் ஊற்றெடுக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, ஒரு மந்தமான மற்றும் பழக்கமான, புத்தகப் புழு நம்பிக்கைக்கு நாம் தீர்வுகாண வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், தூய ஆவியானவருடனும், ஒருவருக்கொருவருடனும் ஒத்துழைப்போம் என்றும், இதனால் இயேசு உலகிற்குக் கொண்டு வர விரும்பிய துணையாளராம் தூய ஆவி உங்கள் அனைவரின் உள்ளங்களையும் ஒளிரச்செய்யட்டும் என்றும் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

Comment