திருத்தந்தை பிரான்சிஸ்
புனித இரேனியுசை ஒன்றிப்பின் மறைவல்லுனராக திருத்தந்தை அறிவித்தார்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 24 Jan, 2022
அமைதிக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, திருஅவைக் கோட்பாடுகளை பாதுகாப்பதில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த இரண்டாம் நூற்றாண்டு ஆயர், புனித இரேனியுஸ் அவர்களை, திருஅவையின் மறைவல்லுநராக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளியன்று திருத்தந்தை வெளியிட்ட திருஅவையின் ஆணையின்படி, இரேனியுசை ’ஒன்றிப்பின் மறைவல்லுனர்’ என அறிவித்ததுடன், இந்த உயரிய ஆயரின் படிப்பினைகள், முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் உதவட்டும் எனவும் கூறியுள்ளார்.
கிழக்கிலிருந்து வந்து ஐரோப்பாவில் ஆயராகப் பணியாற்றிய ஆயர் இரேனியுஸ் அவர்கள், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே ஆன்மிக மற்றும் இறையியல் பாலமாகச் செயல்பட்டார் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்கக் கருத்து பரிமாற்றக் குழுவைச் சந்தித்தபோது, இரண்டாம் நூற்றாண்டு புனிதர் இரேனியுஸ் அவர்களின் அமைதிக்கானப் பணிகளைப் பாராட்டியிருந்ததும், புனித இரேனியுசை மறைவல்லுநராக அறிவிக்கும் விண்ணப்பத்தை, ஜனவரி 20 ஆம் தேதி, வியாழனன்று புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பேராயத் தலைவர் கர்தினால் மார்ச்செல்லோ செமராரோ அவர்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
Comment