No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இவ்வாண்டிற்கான திருத்தந்தையின் உலக சமூகத் தொடர்பு நாள் செய்தி

"வந்து பாருங்ககள்" என்ற தலைப்பில் கடந்த ஆண்டின் உலக சமூகத் தொடர்பு தினத்திற்கு செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டிற்கான அத்தினத்திற்கு "இதயத்தின் காது கொண்டு செவிமடுத்தல்" என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். கடந்த ஆண்டுபார்வைபற்றி பேசிய தான், இவ்வாண்டுசெவிமடுத்தல்பற்றி பேசுவதற்குக் காரணம் என்னவெனில், சமூகத் தொடர்பில் உண்மையான கலந்துரையாடல் என்பது முக்கிய நிபந்தனையாகும் என திருத்தந்தை தன் செய்தியை துவங்கியுள்ளார்.

மே மாதம் 29 ஆம் தேதி சிறப்பிக்கப்படும், 56வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தியை, கத்தோலிக்க சமூகத் தொடர்புகளின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் அவர்களின் திருவிழாவான ஜனவரி 24 ஆம் தேதி, திங்களன்று வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழல்களில் செவிமடுத்தலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்ற போதிலும், பலவேளைகளில் மனிதகுலம் செவிகொடுப்பதைத் தவிர்த்து வாழ விரும்புகின்றது என்ற கவலையை அதில் வெளியிட்டுள்ளார்.

இன்றைய மனித குலத்தின் தேவை என்ன? என ஓர் ஆன்மிக வல்லுனரிடம் கேட்கப்பட்டபோது, "தாங்கள் செவிமடுக்கப்படவேண்டும் என்ற எல்லையற்ற ஆவலை அது கொண்டுள்ளது" எனக் கூறியதைத் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இதயத்தின் காதுகொண்டு செவிமடுப்பதை எடுத்துரைத்து, "அறிவிப்பதை கேட்பதால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ 10:17) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

அடிப்படையில் செவிமடுத்தல் என்பது அன்பின் ஒரு கூறு  என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ‘செவிமடுத்து இதயத்தைத் திறப்பதன் வழி நெருக்கத்தை அதிகரிக்கலாம்எனவும் எடுத்துரைத்துள்ளார்.

கொடுத்தலின் உண்மையான இருப்பிடம் இதயமே என்பதையும் எடுத்துரைத்து, நல்லதொரு சமூகத்தொடர்புக்குச் செவிமடுத்தல் இன்றியமையாதது, இருவர் தனித்தனியாகப் பேசிக்கொண்டிருப்பது கலந்துரையாடல் ஆக முடியாது, பொறுமையுடன் செவிமடுப்பதன் வழியாகவே தகவல் தொடர்பை வலிமையுள்ளதாக மாற்றமுடியும் என்ற கருத்துக்களைத் திருஅவையின் உலக சமூகத் தொடர்பு நாள் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் விவரித்துள்ளார்.

Comment