No icon

குடந்தை ஞானி

உக்ரைன் நாட்டில் பதட்ட நிலைகள் அதிகரிப்பது குறித்து திருத்தந்தை

உக்ரைன் நாட்டின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டில் பதட்ட நிலைகள் அதிகரித்து வருவது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். ஜனவரி 23 ஆம் தேதி, ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரை இறுதியில் இதனை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி 26 ஆம் தேதி, புதன்கிழமையன்று, அமைதிக்காக செபிக்கும் நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.

உக்ரைன் நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலைகளுக்கு, ஆபத்தாகவும் மாறி வரும் அந்நாட்டின் பதட்ட நிலைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இன்றைய மோதல்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தையும் சுட்டிக்காட்டினார்.

பிரிவினைவாதங்களைக் கைவிட்டு, மனிதகுல உடன்பிறந்த நிலைக்காக நல்மனம் கொண்ட அனைவரும் உழைக்க வேண்டும் என, இறைவனை நோக்கி அனைவரும் செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, ஜனவரி 26 ஆம் தேதி, புதன்கிழமையன்று அமைதிக்கான செப நாளாகக் கடைபிடிப்போம் எனவும் வேண்டினார்.

2013 ஆம் ஆண்டு இறுதியில் உக்ரைன் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அரசியல், பொருளாதாரத் தொடர்புகளைக் கொள்ளத் துவங்கியதிலிருந்தும், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுயாட்சித் தீவான கிரிமெய்ட்டை  இரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டதிலிருந்தும், இரஷ்ய ஆதரவுடன் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் மற்றும் லஹான்ஸ் பகுதிகள் தங்களை சுதந்திரப் பகுதிகள் என அறிவித்ததிலிருந்தும், தற்போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இரஷ்ய இராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லையில் நிறுப்பட்டிருப்பதாலும் பதட்ட நிலைகள் தொடர்கின்றன.

Comment