திருத்தந்தை பிரான்சிஸ்
திருப்பீடத்தில் வேதியலாளர்களை சந்தித்தார் திருத்தந்தை
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 31 Jan, 2022
சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இடம்பெற்ற வரும் இன்றயைச் சூழலில், தொழிலாளர் சமூகத்துடன் திருஅவையின் நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார்.
ஜனவரி 29 ஆம் தேதி, சனிக்கிழமையன்று, தோல் தயாரிப்பு பொருள்கள் தொடர்பான வேதியலாளர்கள் குழுவைத் திருப்பீடத்தில் சந்தித்தது உரை வழங்கி திருத்தந்தை, பழங்காலம் தொட்டே உலகில் இருந்து வரும் தோல் தயாரிப்பு தொழிலில் தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களைப் புகுத்தி செயலாற்றி வரும் வேதியல் வல்லுனர்களின் பணி குறிப்பிடும்படியானது என எடுத்துரைத்தார்.
தானும் வேதியல் துறையில் பயின்றதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருந்தொற்று நோயால் மேலும் தீவிரமடைந்துள்ள சமூகப் பொருளாதார நெருக்கடிகளால் தொழிலாளர்கள் துயரங்களை அனுபவித்து வருவதையும் சுட்டிக்காட்டினர்.
பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள், எக்காலத்திலும் தொழில்துறையில் நீதியையும் பாதுகாப்பையும் ஒதுக்கிவைப்பதை நியாயப்படுத்த முடியாது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
தோல் தொடர்புடைய உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவோர், அனுபவம் வாய்ந்த முதியோர்களின் ஆலோசனைகளையும் இளையோரின் ஆர்வத்தையும் ஒன்றிணைத்து சமுதாயத்திற்குப் பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேதியல் பொருள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வேளையில், சுற்றுப்புறப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
Comment