No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

மனித உடன்பிறந்த நிலை என்பது உலகளாவிய கருத்து

பிப்ரவரி 1 ஆம் தேதி, செவ்வாயன்று, மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான திருப்பீடத்தின் ஆட்சி மன்றக் குழுவின்  தலைவரும், மனித உடன்பிறந்த நிலை மற்றும் ஒன்றுபட்ட வாழ்விற்கான ஆவணத்தின் உயர் ஆணையத்தின் உறுப்பினருமான கர்தினால் மைக்கில் ஏஞ்சல் ஆயுசோ குய்க்சோட் அவர்கள், சகோதரத்துவம் என்பது உலகளாவிய கருத்தாகும் என தெரிவித்துள்ளார்.  

மனித சகோதரத்துவம் குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்பட்ட 3 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் கர்தினால் மிகுவல் ஆயுஸோ அவர்கள், அன்றாட வாழ்வில் உடன்பிறந்த நிலையை மேம்படுத்துவதற்குத் தனிநபர்களாகிய ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய பொறுப்பு குறித்து எடுத்துரைத்தார்.

2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபுதாபி நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின்போது அல்-அசார் இஸ்லாமிய தலைமைக்குரு அவர்களுடன் இணைந்து மனித உடன்பிறந்த நிலை குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக கர்தினால் ஆயுசோ குறிப்பிட்டார்.

ஆவணத்தில் கையொப்பமிட்டபிறகு, உடன்பிறந்த நிலையை மேம்படுத்துவதற்காக ஓர் உயர் குழு உருவாக்கப்பட்டது என்று விளக்கிய கர்தினால் ஆயுசோ அவர்கள், சகோதரத்துவத்தை வளர்க்கவேண்டிய பொறுப்பு என்பது திருத்தந்தையையோ, அல்லது அல்-அசார் இஸ்லாமிய தலைமைக்குரு, அல்லது உயர் குழுவினரையோ சார்ந்தது மட்டும் அல்ல, மாறாக, இது அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

பல்வேறு மத மரபுகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து மக்களும், உடன்பிறந்த நிலை என்ற இந்த அழகான மற்றும் குறிப்பிடத்தக்க கருத்தை ஊக்குவிப்பதில் தங்கள் சொந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைப்புவிடுத்த கர்தினால் ஆயுசோ அவர்கள், இது இன்றைய உலகத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் முற்றிலும் அவசியமான ஒன்று என்றும் எடுத்துரைத்தார்

 

Comment