No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

காவல்துறை குழுமத்துடன் திருப்பீடத்தில் திருத்தந்தை

பிப்ரவரி 3 ஆம் தேதி, வியாழனன்று, வத்திக்கானில் திருப்பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறை குழுமத்தை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டுதோறும் மேற்கொள்ளும் இந்த பாரம்பரிய சந்திப்பில் அவர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொற்றுநோயால் குறிக்கப்பட்ட இந்த மாதங்களில், சுகாதார விதிமுறைகள் மற்றும் பொது ஒழுங்கு விதிகளை, திருப்பயணிகளின் தேவைகளுக்குத் தக்கவாறு உங்கள் பணிகளை சிறப்பாக மாற்றியமைக்க  முடிந்தது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு பகல் பாரா உங்களின் பணி இங்கே செபிக்க வருபவர்களையும். என்னைச் சந்திக்க வருபவர்களையும் பாதுகாக்கிறது என்றும், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெறும் ஆன்மீக மற்றும் சமய நிகழ்வுகளில் பங்குபெற வரும் திருப்பயணிகளின் வருகைக்கு உங்களின்   நடவடிக்கைகள் சிறப்பாக உதவுகிறது என்றும் தெரிவித்தார்

இந்த நுட்பமான பணியை நீங்கள் விடாமுயற்சியுடனும் அக்கறையுடனும் செய்வதோடு மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில் கூட பொறுமையாகவும் உதவியாகவும் இருக்க முயற்சி செய்கிறீர்கள் என்றும் அவர்களை பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களைக் கவனித்துக்கொள்வதிலும், அவர்களைக் கண்ணியமாக நடத்துவதிலும் தனிப்பட்ட விதத்தில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் உங்களின் கடினமான பணியை நான் உற்சாகப்படுத்த விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.

பிப்ரவரி 2 ஆம் தேதி, புதனன்று தான் நிறைவேற்றிய திருப்பலியில் இயேசுவை மையமாகக் கொண்டு யோசேப்பும் மரியாவும், சிமியோனும் அன்னாவும் சந்தித்துக்கொண்ட நற்செய்தியை பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். உங்கள் பணிகள் வழியாக இறைவன் மையமாக இருக்கும் இவ்விடத்தில், பல சந்திப்புகள் நடைபெற அனுமதிப்பீர்கள் என்று நினைக்கவைப்பதுடன், எருசலேம் ஆலயத்தில் இயேசுவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை நீங்களும் மக்களுக்கு அளிக்கிறீர்கள் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

இயேசுவை கோவிலுக்கு அழைத்து வந்த புனித யோசேப்பும் அன்னை மரியாவும் உங்களைப் பராமரித்துப் பாதுகாக்கட்டும் என்றும், உங்கள் இதயங்களில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளையும் கவலைகளையும் அவர்களிடம் ஒப்படைக்கிறேன் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.           

Comment