No icon

குடந்தை ஞானி

பாகிஸ்தானின் முதல் இறைஊழியர் ஆகாஷ் பஷீர்

பாகிஸ்தானின் கத்தோலிக்க திருஅவை, புனிதர் பட்டம் மற்றும் மறைசாட்சியத்திற்கான முதல் அதிகாரப்பூர்வ விசுவாசியைக் கொண்டுள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதி, திங்கட்கிழமை புனித ஜான் போஸ்கோவின் விழாவைக் கொண்டாடிய லாகூர் பேராயர் செபாஸ்டியன் ஷா அவர்கள், ஆகாஷ் பஷீரின் மறைசாட்சியத்திறகான ஆவணங்களை வத்திக்கான் ஏற்றுக்கொண்டு புனிதர் பட்டத்திற்கான முதல்படியாக இறைஊழியர் என அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள கத்தோலிக்க தலத் திருஅவைக்கு இது ஒரு சிறப்பான நாள் என்றும், இலாகூரில் உள்ள யூஹனாபாத்தின்  புனித யோவான்  கத்தோலிக்க ஆலயத்தில்  கிறிஸ்தவ சமூகத்தின் உயிரைக் காப்பாற்ற அவர் தனது உயிரை தியாகம் செய்தார் என்றும் பெருமிதத்துடன் கூறிய இவ்வுயர் மறைமாவட்டத்தின் முதமைகுரு  பிரான்சிஸ் கல்சார் அவர்கள், புனிதர்பட்ட படிநிலைகளில், இறைஊழியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட முதல் பாகிஸ்தான் கிறிஸ்தவர் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

இது விடயமாக, கிறிஸ்தவ சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்த இலாகூரின் ஓய்வுபெற்ற முன்னாள் பேராயர் லாரன்ஸ் சல்தான்ஹா அவர்கள், இவரின் மறைச்சாட்சிய மரணம் குறித்து இவ்வளவு சோகமான செய்திகள் இருக்கும்போது, இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆகாஷ் ஒரு நவீன தியாகியின் சிறந்த மாதிரியாகவும், அனைத்து இளையோருக்கும் ஊக்கமளிப்பவராகவும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 15 ஆம் தேதியன்று, இலாகூரில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் யூஹனாபாத்தில் உள்ள யோவான் கத்தோலிக்க ஆலயம்  மற்றும் அருகிலுள்ள பாகிஸ்தானின் கிறைஸ்ட் சர்ச் என்று அழைக்கப்படும் ஆலயம் அருகே  இஸ்லாமிய பயங்கரவாதக் குழு ஒன்று, இரண்டு தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தன்னார்வப் பாதுகாவலராகப் பணியாற்றிய தொன்போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவரான ஆகாஷ், புனித யோவான் கத்தோலிக்க ஆலயத்திற்குள் ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி நுழைவதைத் தடுத்தார். "நான் இறந்தாலும் பரவாயில்லை ஆனால் உன்னை உள்ளே போக விடமாட்டேன்" என்ற வார்த்தைகளுடன் வெடிகுண்டுகள் கட்டியிருந்த பயங்கரவாதியை ஆகாஷ் எதிர்கொண்டார்.

அப்போது வெடிகுண்டை வெடிக்கச்செய்த அந்தத் தீவிரவாதி தன்னையும் கொன்றதுடன் ஆகாஷ் பஷீரையும் இன்னும் இரண்டு பேரையும் கொன்றான். இதனால் ஆலயத்திற்கு வெளியே இருந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் நவ்ஷேராவில் உள்ள ரிசல்பூரில் 1994 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி பிறந்த ஆகாஷ், 20 வயதில் தியாகியாக இறந்தார்.

இசுலாமிய இனத்தாரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பாகிஸ்தானில் முதன் முதலாக மறைசாட்சிய வாழ்வுக்கு அடையாளமாக இருக்கும் இறைஊழியரைப்பெற்று அவரின் பரிந்துரையை வேண்டி செபிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

Comment