No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

புதிய யூபிலி ஆண்டிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி

பிப்ரவரி 11 ஆம், வெள்ளிக்கிழமையன்று புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை மேம்படுத்துவதற்கான திருப்பீடத்தின் தலைவர் ரினோ பிசிசெல்லா அவர்களுக்கு, எதிர்வரும் யூபிலி ஆண்டுக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருஅவையின் வாழ்க்கையில் யூபிலி விழா என்பது, எப்போதுமே ஆன்மிக, திருஅவை மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்து வருகிறது என்றும், கடவுளின்மீது ஆழமான நம்பிக்கையைக் கொண்ட மக்கள் இந்த கொண்டாட்டத்தை சிறந்த விதத்தில் அனுபவித்து வருகின்றனர் என்றும்இது அருளின் கொடையாகவும் கடவுளின் இரக்கபெருக்கத்தின் முழுமையான வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

திருஅவையில் ஏற்கனவே கொண்டாடப்பட்ட பல்வேறு யூபிலி விழாக்களை எடுத்துக்காட்டிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கொண்டாடும் ஒவ்வொரு யூபிலி விழாவும் கடவுளின் கனிந்த அன்பையும், அவரது அளவில்லா இரக்கப்பெருக்கத்தையும் நமக்கு நிறைவாக வழங்கி வருகின்றது  என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

வரவிருக்கும் யூபிலி விழா, நாம் விரைவாகப் பெறவிரும்பும் புதுப்பித்தல் மற்றும் மறுபிறப்புக்கு ஒரு முன்னோடியாக, நம்பிக்கை மற்றும் அதற்குரிய சூழலை மீட்டெடுக்க பெரிதும் பங்களிக்க முடியும் என்றும், அதனால்தான் "நம்பிக்கையின் திருப்பயணிகள்" என்று யூபிலி விழாவின் முழக்கமாகத் தான் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் திருத்தந்தை அதில் தெரிவித்துள்ளார்.

மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் யூபிலியின் ஆன்மிகப் பரிமாணம் என்பது, நமது வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களை இந்தச் சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்தப் பூமியில் நாம் அனைவரும் திருப்பயணிகள் என்பதை உணர்ந்து, இறைவன் நமக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்து நற்காரியங்களை நிறைவேற்றிட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆழ்ந்த மற்றும் உற்சாகமான நம்பிக்கையுடனும், செயலூக்கமான நற்பணிகளுடனும் திட்டமிட்டு கொண்டாடப்படுவதற்குரிய புனித யூபிலி ஆண்டிற்கான பொருத்தமான வழிகளைக் கண்டறியும் பொறுப்பை விசுவாசிகளிடம் ஒப்படைப்பதாகவும் திருத்தந்தை தனது செய்தியில் கூறியுள்ளார்.

ஒரே திருஅவையைக் கட்டியெழுப்புவதற்கு கவர்ச்சிகளற்ற செயல்பாடுகளை மேற்கொள்வதிலும், பொறுப்பான பங்கேற்புகளை மேம்படுத்துவதிலும், புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வை வளர்ப்பதிலும் தூய ஆவி நமக்கு என்றும் துணை இருப்பராக என்றும் திருத்தந்தை நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Comment