No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

பணமும், உலகப்பொருட்களும் உண்மை மனமகிழ்வைத் தருவதில்லை

இயேசுவின் சீடர்களின் தனித்தன்மை, அவர்கள் அடையும் பலன்கள் என்ன என்பது குறித்து எடுத்துரைக்கும் லூக்கா நற்செய்தி 6 ஆம் பிரிவின்பேறுகள்என்ற பகுதி குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையில் எடுத்துரைத்தார்.

பிப்ரவரி 13 ஆம், ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரைக்கென புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு அந்நாள் நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் பேறுபெற்றோர்(லூக் 6:20-23) என்ற பகுதி குறித்து சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் இயேசு தன் சீடரை நோக்கி, சீடர்களுக்குரிய பண்பு குறித்து எடுத்துரைத்தது அங்கிருந்தவரக்ளுக்கு வியப்பாக இருந்தது என எடுத்துரைத்தார்.

இயேசுவின் சீடர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதன் பதிலை, இயேசு எடுத்துரைத்தபேறுகள்என்பவை தருகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்என்று உரைப்பது, அவர்கள் ஏழைகளும் பேறுபெற்றோருமாக இருக்கின்றனர் மற்றும் அவர்கள் ஏழைகளாக இருப்பதாலேயே பேறுபெற்றோராய் இருக்கின்றனர் என்ற இரண்டு விடயங்களை அறிவிப்பதாக உள்ளது, என மேலும் கூறினார்.

இயேசுவின் சீடர்கள் என்பவர்கள் பணத்திலும், உலகாயுதப்பொருட்களிலும் தங்கள் மனமகிழ்வைக் காண்பதில்லை, மாறாக, இறைவன் வழங்கும் கொடைகளான வாழ்வு, இயற்கை, சகோதரர் சகோதரிகள் என அனைத்துக் கொடைகளிலும் மனமகிழ்வைக் கண்டுகொள்வதுடன், தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்வதிலும், எளிமையுடனும், முன்சார்பு எண்ணங்கள் இன்றி செயல்படுவதிலும் மகிழ்கின்றனர் என திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் எடுத்துரைத்தார்.

புதுமையான முறையில் பெருமளவு மீன்கள் கிடைத்ததைக் கண்ட புனித பேதுரு, அனைத்தையும் துறந்துவிட்டு இயேசுவை பின்தொடர்ந்ததைப் பற்றி எடுத்துரைத்த கடந்த ஞாயிறின் நற்செய்தியையும் மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் குரலுக்கு செவிமடுப்பதற்கும், அவரை பின்பற்றுவதற்கும் உள்ள வேறுபாட்டையும் எடுத்துரைத்தார்.

பணம், பொருள் என தேடி ஓடி சேர்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற உலகின் எண்ணத்திற்கு எதிராக, ஏழைகளே பேறுபெற்றோர், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என கூறும் இயேசு, சுயநல எண்ணங்களால் தேடிக்குவிக்கும் அனைத்தும்  இதயங்களை காலியாக வைத்திருக்கவே உதவுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார் என உரைத்த திருத்தந்தை, நம்மையே மையப்படுத்தி நாம் ஆற்றும் சுயநல எண்ணங்களிலிருந்து நம்மை விடுவிப்பதன் வழியாக, பேறுபெற்றவர்களாக, மகிழ்ச்சியுடையவர்களாக இறைவன் நம்மை மாற்றுகிறார் என எடுத்துரைத்தார்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு சீடருக்குரிய தயார் நிலையில் இருக்கின்றோமா?, நம் கடின மனநிலைகளை கைவிட்டு இயேசுவின் பாதையை தெரிந்துகொண்டு, மனதில் மகிழ்வைக் காண்கிறோமா என்ற கேள்விகளை முன்வைத்து திருத்தந்தை பிரான்சிஸ் தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவுச்செய்தார்.       

Comment