No icon

குடந்தை ஞானி

பிலிப்பீன்ஸ் பொதுத்தேர்தல் கத்தோலிக்க பள்ளிகள் சங்கம் கோரிக்கை

பிப்ரவரி 7 ஆம் தேதி, திங்களன்று, “சிதைந்த மதிப்புகளைக் கொண்ட வேட்பாளர்களுக்கு அரசில் இடமில்லைஎன்று பிலிப்பீன்ஸ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 26 பள்ளித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிலிப்பீன்சில் உள்ள CEAP எனப்படும் கத்தோலிக்கப் பள்ளிகளின் சங்கம், மனித உரிமைகளை ஊக்குவிக்கும் மற்றும் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் வழியாகக் கடவுளுக்கும் நாட்டிற்கும் தங்கள் அன்பைக் காட்ட வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தேர்தல்களில் கிறிஸ்தவ விழுமியங்கள் வலுவாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், பொய்கள் மற்றும் வரலாற்றுத் திரிபுகளின் தளத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களைத் தாங்கள் கடுமையாக நிராகரிப்பதாகவும் எடுத்துக்காட்டியுள்ள இச்சங்கம், சமூக ஊடகங்களுக்குப் பெருமளவில் நிதியளிக்கப்பட்டு தவறான செய்திகள் பரப்புரைச்  செய்யப்படுகின்றன என்றும் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக மார்கோஸ் ஆட்சியின் சர்வாதிகாரம் மற்றும் இராணுவச் சட்டம் தங்கள் அரசியல் வரலாற்றில் மிகவும் பயனுள்ளவைகள் என்று கூறுவதை, தாங்கள் கடுமையாக நிராகரிப்பதாகக் கூறியுள்ள இச்சங்கம்,   ஓட்டு வாங்குதல் மற்றும் மிரட்டல் வழியாக, மக்களின் வறுமையைச் சுரண்டிக்கொள்ளும்  வேட்பாளர்களைத் தாங்கள் கண்டிப்பதாகவும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாங்கள் நீதியை மதிப்பதாகவும், அதனால் தற்போதைய நிர்வாகத்தின் அநீதியானச்  செயல்களை ஆதரித்த வேட்பாளர்களை நிராகரிப்பதாகவும் தெரிவிக்கும் இச்சங்கம், ஆயிரக்கணக்கான ஏழைகள், மற்றும் பலவீனமானவர்களைக் கொன்ற போதைப்பொருள் யுத்தம், இந்த நாட்டின் மோசமான தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் வேதனைத் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் புதிய அரசுத் தலைவர் மற்றும் சட்டமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இவ்வாண்டு மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாக மூன்று மாதத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

Comment