குடந்தை ஞானி
மறைக்கல்வியுரை: திரு அவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 22 Feb, 2022
புனித யோசேப்பு குறித்த ஒரு மறைக்கல்வித் தொடரை, கடந்த பல வாரங்களாகப் புதன்கிழமைகளில் வழங்கி வரும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் 12 ஆம் தொடரை, பிப்ரவரி 16 ஆம் தேதி, புதன்கிழமையன்று, மத்.2 :13-15 அடிப்படையில் மறைக்கல்விச் சிந்தனையைப் பகிர்ந்தார்.
அன்புச் சகோதரர் சகோதரிகளே, "அகில உலகத் திரு அவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு" என்ற சிந்தனைப் பகிர்வுடன், நம் யோசேப்புக் குறித்த சிந்தனைப் பகிர்வு நிறைவு பெறுகின்றது. விவிலியச் சான்றுகளின் அடிப்படையில், "அகில உலகத் திரு அவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு" என்ற பட்டம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால் வழங்கப்பட்டது. நற்செய்தியில் தொடர்ந்து அன்னை மரியா மற்றும் இயேசுவின் பாதுகாவலராகவே புனித யோசேப்பு காட்டப்படுகிறார். திருக்குடும்பத்தை அவர் எப்படிப் பாதுகாத்தாரோ, அதுபோல்தான் திரு அவையையும் அவர் தொடர்ந்து காத்து வருகிறார். திரு அவையோடு இணைந்து ஏழைகள், நோயுற்றோர், இறக்கும் தறுவாயில் இருக்கும் அனைவரையும் அவர் பாதுகாக்கிறார். ஏனெனில், இவர்களைத்தான் இயேசுவும், ‘சின்னஞ் சிறிய என் சகோதரர்கள்’ என அழைத்தார். புனித யோசேப்பும் இதைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறார். அதாவது, திரு அவையையும் கிறிஸ்துவின் ஏழை சகோதரர்களையும் நாம் அன்பு கூர்ந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று திரு அவையை விமர்சிப்பது எளிதாகத் தெரியும். இன்றையக் காலக்கட்டத்தில், திரு அவையை அன்புகூர்ந்து பாதுகாக்க வேண்டுமென்கின்ற இந்த அழைப்பு, நம்மிடம் சிலவற்றை எதிர்பார்க்கிறது.
கடவுளின் கருணையால், அருளான வகையில் மீட்கப்பட்ட பாவிகள் நாம் என்பதை வெளிப்படையாக ஏற்கவும், நம்மிடையே இருக்கும் உயிர்த்த கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கும், அருளடையாளங்களில் காணப்படும் இயேசுவின் அருள் கொண்டுள்ள புதுப்பிக்கும் வல்லமைக்கும், தூய ஆவியார் வழங்கும் தொடர் கொடையான புனிதத்துவத்திற்கும் சான்றுகளாக விளங்க நாம் எதிர்பார்க்கப்படுகிறோம். வரலாற்றில் நாம் காணும் அனைத்து புனிதர்களுடனும் இணைந்து நம்மையும், திரு அவையின் தேவைகளையும் புனித யோசேப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்து ‘வாழ்வின் பாதையில்’ நம்மை வழிநடத்தவும் அனைத்துத் தீமைகளிலிருந்து நம்மைக் காக்கவும், அவரிடம் வேண்டுவோம்.
Comment