குடந்தை ஞானி
உக்ரைனுக்கு மனிதாபிமான வழிகளைத் திறக்க காரித்தாஸ் வேண்டுகோள்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 08 Mar, 2022
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனியர்களுக்கு வன்முறையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக, மனிதாபிமான வழிகளைத் திறக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுடன் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பு இணைந்துள்ளது.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் ரஷ்யத் தாக்குதல் குறித்து, பிப்ரவரி 27 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனில் துன்புறுவோர் நம் சகோதரர் சகோதரிகள் என்றும், தாராள இதயத்துடன் அவர்களுக்கு மனிதாபிமான வழிகளைத் திறக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனை மையமாகக்கொண்டு அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் அலோய்சியஸ் ஜான் அவர்கள், மார்ச் 1 ஆம் தேதி, திங்களன்று, பங்கேற்ற காணொளிக் கருத்தரங்கம் ஒன்றில், உக்ரைன் மற்றும் போலந்தின் காரித்தாஸின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய காரித்தாஸின் தலைவர் ஆகியோருடன் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனியர்களுக்கு உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடந்த வாரம், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில், உக்ரேனியர்களின் வாழ்க்கை ஒரு கனவாக மாறிவிட்டது என்று தனது தொடக்க உரையில் எடுத்துரைத்த அலோய்சியஸ் ஜான் அவர்கள், இம்மக்களுக்கு உதவிபுரிவதில் காரித்தாஸ் அமைப்பானது முன்னின்று செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சாலைகளும், கட்டடங்களும் மிகவும் மோசமாக சிதிலமடைந்துள்ளன என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவி வழங்கப்பட்டு வருகின்றன என்றும் எடுத்துரைத்த உக்ரைன் காரித்தாஸ் அமைப்பின் பணியாளர் அருள்தந்தை ஸ்வியாடோஸ்லாவ் அவர்கள், சிறப்பாக கர்ப்பிணி மற்றும், குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள பெண்களுக்கு, ஐந்து நகரங்களில் சிறப்பு ஆதரவுச் சேவைகளை வழங்க முயற்சித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
Comment