குடந்தை ஞானி
கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவர்கள்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 08 Mar, 2022
இந்தோனேசியா நாட்டிற்குக் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று, அந்நாட்டின் ஆயர் பேரவையின் நிர்வாகச் செயலாளர் பீட்டர் கிறிஸ்டியன் சிஸ்வான்டோகோ கூறியுள்ளார். அந்நாட்டின் கத்தோலிக்கப் பத்திரிகையாளர்கள் சங்கம் (PWKI) ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க ஊடகங்களின் முக்கிய பங்களிப்பையும், தேசிய நலன்களை வலுப்படுத்துவதில் அதன் செயல்பாடுகளையும் பாராட்டிப் பேசிய பணியாளர் பீட்டர் கிறிஸ்டியன் சிஸ்வான்டோகோ அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, பன்முகத்தன்மைக் கொண்ட நம் இந்தோனேசியாவின் ஒற்றுமையைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டியது, அவர்களின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கத்தோலிக்கர்களாகிய நீங்கள் அனைவரும், நற்செய்தியை அறிக்கையிடுவதில் உங்களை அர்ப்பணிப்பதன் வழியாக, உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையையும் நெறிமுறைகளையும் எப்போதும் பராமரித்து வருகிறீர்கள் என்று கூறிய சிஸ்வான்டோகோ அவர்கள், சமுதாயத்திற்கு நம்பிக்கையைக் கொண்டுவர நீங்கள் அனைவரும் அடிப்படையில் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் ஏற்றுள்ள பணி, ஓர் உன்னதமான பணி என்றும் பத்திரிகையாளர்களிடம் எடுத்துரைத்தார்.
ஜகார்த்தாவில் உள்ள இரண்டு பத்திரிகையாளர்களான புட்டுட் பிரபந்தரோ மற்றும் பீட்டர் ஜெரோ ஆகியோரின் முயற்சியால் PWKI சங்கம் 2004 இல் நிறுவப்பட்டது. நாடு மற்றும் திரு அவையின் நன்மைக்காக, அனைத்துக் கத்தோலிக்க ஊடக வல்லுநர்களையும் ஒன்றிணைக்கும், ஒரு சமூகக் கருவியாக அவர்கள் இச்சங்கத்தை உருவாக்கினர்.
Comment