குடந்தை ஞானி
கடவுளின் பெயரால் கேட்கிறேன், படுகொலைகளை நிறுத்துங்கள்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 23 Mar, 2022
உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் நிறுத்தப்படுமாறு, கடவுளின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன் என்று, மிகுந்த வேதனையோடு, மார்ச் 13 ஆம் தேதி ஞாயிறன்று மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
தான் கத்தோலிக்கத் திரு அவையின் தலைமைப் பணியை ஏற்ற ஒன்பதாம் ஆண்டு நிறைவு நாளாகிய மார்ச் 13 ஆம் தேதி ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செபவுரையாற்றிய பின்னர், உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் குறித்த தன் மன வேதனையை திருத்தந்தை பிரான்சிஸ் வெளிப்படுத்தினார்.
போரினால் அழிக்கப்பட்டுவரும் உக்ரைன் நாட்டில், அப்போரால் பலியாகுவோர் மற்றும் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்த திருத்தந்தை, உக்ரைனில் இடம்பெற்றுவரும் பயங்கரமான போரால் மரியுபோல் நகர், மறைசாட்சிகளின் நகரமாக மாறி வருகிறது என்றும் கூறினார்.
கடவுள் அமைதியின் கடவுள் மட்டுமே; அவர் போரின் கடவுள் அல்ல. வன்முறையை ஆதரிப்பவர்கள், அவரது பெயரை அவமதிக்கின்றனர் என்றும், சிறார், ஆயுதம் ஏந்தாத அப்பாவி குடிமக்கள் ஆகியோர் மீது காட்டுமிராண்டித்தனமாக கொடூரங்கள் நடத்தப்படுகின்றன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவலை தெரிவித்தார்.
நகரங்களைக் கல்லறைகளாக மாற்றுவதற்கு முன்னர், ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கடும் ஆயுதத் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும், போர் நிறுத்தப்படுமாறு விண்ணப்பிக்கும் பொது மக்களின் குரல்களோடு, வேதனை நிறைந்த மனதோடு என்னையும் இணைக்கின்றேன் என்றும் திருத்தந்தை கூறினார்.
துன்புறுவோரின் அழுகுரல்கள் கேட்கப்படட்டும்; குண்டுவீச்சுக்களும் தாக்குதல்களும் நிறுத்தப்படட்டும்; உண்மையான மற்றும் உறுதியான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படட்டும்; பாதுகாப்பான மனிதாபிமானக் கதவுகள் திறக்கப்படட்டும் என்றும் இந்தப் படுகொலைகளை நிறுத்துங்கள் என்றும் கடவுளின் பெயரால் கேட்கிறேன் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்
அனைத்து மறைமாவட்டங்களும், துறவறக் குழுமங்களும் அமைதிக்காக அதிகமாகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டு, புலம்பெயர்ந்தோருக்கு உதவும் மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி கூறினார். 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி, கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்தார்.
Comment