குடந்தை ஞானி
நீதித்துறையினர் நெருக்கடியான காலக்கட்டத்தில் பணியாற்றுகின்றனர்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 23 Mar, 2022
மனித சமுதாயம் கடும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுவரும் இக்காலக்கட்டத்தில், வத்திக்கானின் நீதித்துறையில் முழு அர்ப்பணத்தோடு பணியாற்றிவரும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் நன்றியைத் தெரிவித்தார்.
வத்திக்கான் நாட்டு நீதிமன்றத்தின் 93வது நீதித்துறை ஆண்டின் துவக்கமாக, மார்ச் 12 ஆம் தேதி, சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த அந்நீதிமன்றத்தின் பணியாளர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் திருஅவையில் இடம்பெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள் பற்றி எடுத்துரைத்தார்.
இத்தயாரிப்பு வழிமுறைகளில், பல்வேறு நிலைகளிலிருந்து வழங்கப்படும் கருத்துக்களுக்கு, முற்சார்பு எண்ணமின்றி கவனமுடன் செவிமடுக்கவேண்டும் என்றும், இதற்கு நேரமும், பொறுமையும் தேவைப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, மற்றவருக்குச் செவிமடுக்கும் இத்தகைய திறந்தமனது, கவனமுடன் நீதி வழங்க உதவும் என்று கூறினார்.
வழக்குத் தொடுத்திருப்பவர்களுக்கு நீதி வழங்கவும், சமுதாய நல்லிணக்கத்தைக் காக்கவும், ஒரு நீதியான தீர்ப்பு வழங்க, மிகக் கவனமுடன் பொறுமையோடு தெளிந்துதேர்வு செய்வது இன்றியமையாதது என்றும், தண்டனை வழங்கும் தீர்ப்புகள், இரக்கம் காட்டுவதற்குரிய வாய்ப்புகளோடு தொடர்புடையனவாகவும், இறுதியில் அவை, மன்னிப்பு மற்றும் மனமாற்றத்திற்கு அழைப்புவிடுப்பதாகவும் இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
வத்திக்கானின் சட்டத்துறையில் இடம்பெறும் சீர்திருத்தங்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டமும், தீர்ப்புகளும் எப்போதும் உண்மை, நீதி, நற்செய்தி கூறும் பிறரன்பு ஆகியவற்றுக்குப் பணியாற்றுவதாய் அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Comment