குடந்தை ஞானி
கிறிஸ்தவ ஒன்றிப்பு, மனித சமுதாயம் என்ற கடல்மீது பயணிக்கிறது
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 23 Mar, 2022
கிறிஸ்தவ ஒன்றிப்பை மையப்படுத்தி, ஒப்புரவாக்கப்பட்ட பன்மைத்தன்மை என்ற தலைப்பில், பிரஸ்பைடிரியன் கிறிஸ்தவ சபை திருப்பணியாளர் மார்செலோ ஃபிகுரோவா அவர்கள் எழுதிய நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நூல் ஆசிரியரின் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த கண்ணோட்டத்தைப் பாராட்டியுள்ளார்.
இந்த இலக்கியப் படைப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்கிறேன் எனவும், இந்நூலைப் பார்த்தவுடனேயே, இது மதங்களுக்கு இடையே இடம்பெறும் உரையாடல் பற்றிய நூலாகத் தெரிகின்றது, ஆனால், இந்நூலை ஆழ்ந்து வாசிக்கும்போது, இது ஓர் உண்மையான, தனிப்பட்ட, எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீகம் சார்ந்த, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணமாக அமைந்திருப்பதை உணர முடிகின்றது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டிலிருந்து லொசர்வாத்தோரே ரொமானோ வத்திக்கான் நாளிதழில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் குறித்து மார்செலோ ஃபிகுரோவா அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
மார்செலோ ஃபிகுரோவா அவர்கள் எழுதும் கட்டுரைகளை, எப்போதும் கவனத்தோடு வாசிப்பேன் என்றும், அவை கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையை நோக்குவதற்கு தனக்கு உதவுகின்றது என்பதால், அவற்றைத் தொடர்ந்து வாசிப்பேன் என்றும், திருத்தந்தை தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். மார்செலோ ஃபிகுரோவா அவர்கள், வத்திக்கானின் தினத்தாளான லொசர்வாத்தோரே ரொமானோ அர்ஜென்டீனாவில் பிரசுரிக்கப்படும் பொறுப்பை ஏற்று நடத்துபவர் ஆவார்.
அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த, மார்செலோ ஃபிகுரோவா அவர்கள் எழுதியுள்ள Reconciled Diversity: A Protestant in the Pope’s Newspaper என்ற நூல், மார்ச் 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. வத்திக்கான் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
Comment