குடந்தை ஞானி
காலியான வலைகளோடு இருப்பவர்கள் இயேசுவிடம் திரும்பி வரவேண்டும்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 11 May, 2022
உயிர்த்த இயேசு கலிலேயாக் கடற்கரையில் தம் திருத்தூதர்களுக்கு மூன்றாம் முறையாக காட்சியளித்த, யோவான் நற்செய்தி வாசகத்தை (21:1-19) மையப்படுத்தி, மே 01 ஆம் தேதி, ஞாயிறு அன்று அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலியான வலைகளோடு இருக்கின்ற கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் திரும்பிவரவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இயேசுவைப் பின்செல்வதற்காக தனது மீன்பிடித்தொழிலை விட்டுவந்த திருத்தூதர் பேதுரு, இயேசுவின் சிலுவை மரணத்திற்குப்பின், மீண்டும் கலிலேயாக் கடலில் மீன்பிடிக்கச் சென்றது மற்றும் மீன்கள் ஒன்றும் அகப்படாமல் இருந்தது குறித்த நற்செய்திப் பகுதியை விளக்கிய திருத்தந்தை, இயேசுவின் இறப்பால் பேதுரு, சோர்வுற்று, தன் பழைய வாழ்வுக்குத் திரும்பினார் என்று கூறினார்.
ஆனால், இயேசு திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியோரை அழைத்த கலிலேயாக் கடற்கரைக்குச் சென்று, அவர்களைக் கடிந்துகொள்ளாமல், பிள்ளைகளே! என அழைத்து, அவர்களின் காலியான வலைகளை மீண்டும் துணிச்சலோடு கடலில் வீசச் சொன்னார், அவ்வாறு அவர்கள் செய்தபின்னர் வலைகள் கிழியும் அளவுக்கு ஏராளமான மீன்களைப் பிடித்தனர் என்று திருத்தந்தை கூறினார். எனவே, அன்புச் சகோதரரே, சகோதரிகளே, வாழ்க்கையில் நம் வலைகள் காலியாக இருக்கும்போது, நம்மை நினைத்து வருத்தப்படாமல், நம் கடந்தகால நிலைகளுக்கே திரும்பாமல், இயேசுவோடு வாழ்வை மீண்டும் தொடங்குவதற்குத் துணிச்சல் பெறவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இயேசுவைச் சந்தித்தபின்னர், மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற புனித பேதுரு போன்று கிறிஸ்தவர்களாகிய நாம் இருக்கின்றோமா என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் மற்றும் அன்போடு உயிர்த்த கிறிஸ்துவிடம் திரும்பவேண்டும் என்றும் கூறினார். சோர்வு, ஏமாற்றம், சோம்பல் போன்றவற்றால், ஆண்டவரையும், நாம் தேர்ந்துகொண்ட வாழ்வையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம் என்றுரைத்த திருத்தந்தை, அதற்கு, குடும்பங்களில் ஒருவர் ஒருவரோடு உரையாடுவதற்கு நேரம் ஒதுக்காமல் இருப்பது, நம் சொந்தத் தேவைகளில் மூழ்கி, செபத்தைக் கைவிடுவது, பிறரன்பைப் புறக்கணிப்பது போன்ற நிலைகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் என்றார்.
நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என உயிர்த்த இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டபின்னர், அவர் மீன்பிடித்தொழிலை முற்றிலும் கைவிட்டு, தன் உயிரைக் கையளிக்கும் அளவுக்கு, கடவுளுக்கும், மற்றவருக்கும் பணியாற்ற தன்னை அர்ப்பணித்தார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவை அன்புகூர விரும்பினால், நாமும் நன்மைபுரிவதில் ஆர்வம் காட்டவேண்டும், இதற்கு அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுசெய்தார்.
Comment