குடந்தை ஞானி
பாப்பிறை மறைப்பணி கழகங்களின் 200வது ஆண்டு நிறைவு
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 11 May, 2022
திரு அவையின் வாழ்விலும், மறைப்பணியிலும் கத்தோலிக்கப் பொதுநிலையினரின் ஈடுபாடு மிகவும் இன்றியமையாதது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருகிறார் என்று, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவரான பேராயர் ஜியாம்பீட்ரோ டல் டோசோ அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தந்தை 11 ஆம் பயஸ் அவர்கள், Romanorum Pontificum என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu Proprio அறிக்கை வழியாக, பாப்பிறை மறைப்பணி கழகத்திற்கு அங்கீகாரம் அளித்ததன் நூறாம் ஆண்டு, மே 03 ஆம் தேதி, செவ்வாயன்று நிறைவு பெற்றது எனவும், இந்த அங்கீகாரம், உலகளாவியத் திரு அவைக்கு, பாப்பிறை மறைப்பணி கழகத்தின் மறைப்பணி ஆர்வமும், பணியும் முக்கியமானது என உறுதி செய்தது எனவும், பேராயர் ஜியாம்பீட்ரோ டல் டோசோ அவர்கள் கூறியுள்ளார்.
மறைப்பணியோடு ஒருமைப்பாடு
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திற்காக பாப்பிறை மறைப்பணி கழகம் உருவாக்கப்பட்டு, மே 3 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையோடு 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது என்றுரைத்துள்ள பேராயர் ஜியாம்பீட்ரோ டல் டோசோ அவர்கள், இவ்வேளையில், இறைவேண்டல், நன்கொடைகள் மற்றும் மறைப்பணியில் ஆர்வம் ஆகியவை வழியாக திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் திரு அவையின் மறைப்பணியில் பங்குகொள்ள முடியும் என்று கூறினார்.
இவ்வாறு பங்குகொள்வதன் வழியாக கிறிஸ்தவர்கள், உலகெங்கும் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ முடியும் என்றும், கடந்த 200 ஆண்டுகளாக, ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் பகுதி நாடுகளில் மறைப்பணி தொடர்புடைய திட்டங்களுக்கு இக்கழகம் உதவி வருகின்றது என்றும், பேராயர் ஜியாம்பீட்ரோ டல் டோசோ அவர்கள் கூறியுள்ளார்.
Comment