குடந்தை ஞானி
இலங்கையில் வன்முறைகள் தவிர்க்கப்பட திருத்தந்தை அழைப்பு
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 18 May, 2022
சமுதாய மற்றும் பொருளாதாரச் சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் இலங்கைவாழ் மக்கள், தங்களின் கோரிக்கைகள் கேட்கப்படுவதற்கு அமைதியான முறையில் செயல்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே 11, புதனன்று கேட்டுக்கொண்டார்.
மே 11 ஆம் தேதி, புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் வழங்கிய பொது மறைக்கல்வியுரைக்குப்பின், இலங்கையில் போராடி வருகின்ற பொது மக்களை, குறிப்பாக இளையோரை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் அரசியல் தலைவர்கள், இம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்திக் கூறினார்.
இலங்கையில் வன்முறைக்கு இடமளிக்காத, அமைதியான மனநிலை பேணிக்காக்கப்படவேண்டும் என்று விண்ணப்பிக்கும் அனைத்து மதத் தலைவர்களோடு தானும் இணைவதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, நாட்டு மக்களின் உண்மையான ஏக்கங்கள் செவிமடுக்கப்படவும், மனித உரிமைகள் மற்றும், பொதுமக்களின் சுதந்திரங்கள் முழுமையாக மதிக்கப்படுவதற்கு உறுதியளிக்கப்படவும் வேண்டும் என, அதற்குப் பொறுப்பான தலைவர்களுக்கு அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீண்டகாலமாக அமைதியான முறையில் இடம்பெற்றுவந்த மக்கள் போராட்டங்கள், இவ்வாரத்தில் வன்முறையாக மாறி, எட்டுப் பேர் உயிரிழப்பதற்கும், 219 பேர் காயமடைவதற்கும், பிரதமர் மகிந்த இராஜபக்சே அவர்கள் பதவி விலகவும் காரணமாகியுள்ளன.
உலகில் அமைதி நிலவ..
மேலும், மே 11 ஆம் தேதி, புதன் பொது மறைக்கல்வியுரையில், போர்த்துக்கீசியம் பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, இந்நாள்களில் பாத்திமா அன்னைத் திருத்தலத்திற்குச் செல்லும் திருப்பயணிகளோடு நாமும் சேர்ந்து, உலகில் அமைதி நிலவ அன்னை மரியாவிடம் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெர்மானியம் பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, உலகில் அமைதி நிலவ தினமும் செபமாலை செபியுங்கள் என்றும், இந்த நம் காலத்தில் மகிழ்விலும், துயரிலும் அன்னை மரியா நம் உடனிருக்க அவரிடம் மன்றாடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comment