No icon

குடந்தை ஞானி

அமைதிக்காக ஆண்டவரிடம் செபிப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மே 22 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல நாடுகளின் ஏறத்தாழ 25 ஆயிரம் திருப்பயணிகளுக்கு ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரே, உம் அமைதியை எனக்கு அளித்தருளும் என தினமும் நாம் மன்றாடவேண்டும் என்று கூறினார்.

என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்

இயேசு இறுதி இராவுணவில் தம் திருத்தூதர்களுக்குப் பிரியாவிடை அளித்தபோது,  “அமைதியை உங்களுக்கு விட்டுச்செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” (யோவா 14:27) என்று கூறியதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுப்பார், பேதுரு, தன்னை மறுதலிப்பார் மற்றும்  ஏனைய திருத்தூதர்களும் தன்னைக் கைவிட்டுவிடுவார்கள் என்ற நிலையிலும், ஆண்டவர் இறுதி நேரம் வரை, தன் பாசத்தை வெளிப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

இயேசுவின் வாழ்வின் இந்த இறுதி நேரங்கள், அவரது வாழ்வு முழுவதையும் ஒருசேரக் குறித்துக் காட்டுகின்றன எனவும், அவர், அச்சம் மற்றும் வேதனையை உணர்ந்தவேளையில், கசப்புணர்வுக்கோ அல்லது கோபத்திற்கோ இடம்கொடுக்கவில்லை. மாறாக, நம்பிக்கை வைப்பதில் பழகிப்போன அவரது மனத்தாழ்மையுள்ள இதயத்திலிருந்து பிறக்கும் அமைதியில் அவர் இருந்தார் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் விளக்கினார்.

ஒருவர் தனக்குள்ளே அமைதியைக் கொண்டிராமல் இருந்தால், அவரால் அடுத்தவரை அமைதியாக வாழவிட முடியாது என்றும் உரைத்த திருத்தந்தை, கனிவு இயலக்கூடியதே என்பதை இயேசு காட்டினார். அப்பண்பை மிகவும் துன்பம்நிறைந்த நேரத்தில் அவர் வெளிப்படுத்தினார். நாம் அவரது அமைதியின் வாரிசுகள் என்பதால், நாமும் அதேவழியில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார் என எடுத்துரைத்தார்.

மற்றவருக்குச் செவிமடுப்பதற்கும், பதட்டங்களைத் தணிப்பதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், கனிவு மற்றும் திறந்த மனம் உள்ளவர்களாக இருப்பதற்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஆயிரம் வார்த்தைகள்  அல்லது போதனைகளைவிட நம் நடத்தையே மதிப்புமிக்கது என்றும், பதட்டநிலைகள், முரண்பாடுகள் போன்றவற்றை அகற்றுவதற்கு,  இயேசுவின் சீடர்களாக, நாம் கோபத்தை வெளிப்படுத்தாமல், கனிவோடு நடந்துகொள்கிறோமா என்ற கேள்வியையும் முன்வைத்தார். இவை நமக்கு பெரிய சவால்கள்தான் என்றும் கூறியத் திருத்தந்தை, ‘என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்’ என்ற இயேசுவின் திருச்சொற்கள் குறித்தும் விளக்கினார்.

"என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்"

‘என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்’ என்ற இயேசுவின் திருச்சொற்கள், நம் தனிப்பட்ட துன்பங்களில் அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருப்பதற்கு நமக்கு உதவுகின்றன என்றும், அமைதி கடவுளின் கொடை என்றும், உலகம் தர இயலாத அந்த அமைதியை ஆண்டவர் அருளுகின்றார், அவர் நமக்குத் தூய ஆவியைத் தருகின்றார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

கடவுள் நம்மில் பிரசன்னமாய் இருப்பது, கடவுளின் அமைதியின் வல்லமை எனவும், அது, கடின இதயத்தை எளிதாக்கி, அதை அமைதியில் நிரப்புகின்றது எனவும், ஆண்டவர் நமக்கு வழங்கும் அமைதி, நாம் அனைவரும் பகைவர்கள் அல்ல; மாறாக, சகோதரர், சகோதரிகள் என்பதை நினைவுபடுத்துகிறது எனவும், மன்னிப்பதற்கும், அமைதியின் மனிதர்களாக மாறும்வண்ணம் புதிய வாழ்வைத் தொடங்குவதற்கும் ஆண்டவர் உதவுகிறார் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

அமைதி எனும் கொடைக்காக..

அமைதி எனும் கொடையை... குறிப்பாக, நம் இதயங்கள் சோர்வடைந்து, பொறுமையின்றி மற்றும் கோபத்தில் இருக்கும்போது, அக்கொடையை தூய ஆவியாரிடமிருந்து நாம் பெறுவதற்கு தொடர்ந்து மன்றாடுவோம். அமைதியின் ஆவியானவருக்காக ஆண்டவரை மன்றாட வேண்டிய தேவை நமக்கு அதிகம் இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆண்டவரே, உம் அமைதியைத் தாரும், உம் தூய ஆவியைத் தாரும் என்று தினமும் செபிப்பதற்குக் கற்றுக்கொள்வோம். இந்த அமைதியை, நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு, தினமும் நாம் சந்திப்பவர்களுக்கு மற்றும் நாடுகளின் தலைவர்களுக்கு ஆண்டவர் அருளுமாறு வேண்டுவோம் என்று, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Comment