குடந்தை ஞானி
ஆயுத வர்த்தகம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் –திருத்தந்தை
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 01 Jun, 2022
மனித சமுதாயத்தின் நலன்மீது அக்கறையின்றி இதுவரை நடைபெற்ற ஆயுத வர்த்தகம் போதும். இனிமேலும் அது தொடர்ந்து இடம்பெறக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 25 ஆம் தேதி, புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் கேட்டுக்கொண்டார்.
மே 24 ஆம் தேதி, செவ்வாயன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தின் யுவால்டி நகரிலுள்ள, ராப் தொடக்கப் பள்ளிக்குள் 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, தாறுமாறாகச் சுட்டதில் 19 சிறார் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைக் கேட்டு என் இதயம் நொறுங்கியது என்றும், இவ்வன்முறையில் கொல்லப்பட்ட சிறார், வயதுவந்தோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன். இத்தகைய கடுந்துயரங்கள் ஒருபோதும் இடம்பெறாதிருக்க நம்மை அர்ப்பணிப்போம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த இஸ்பானியப் பள்ளியில், ஏழுக்கும், பத்து வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ 500 சிறார் படிக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இவ்வன்முறையை நடத்தியவர் சால்வதோர் ராமோஸ் என்ற இளைஞர் எனவும், இவர் இப்பள்ளியில் துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்குமுன், தன் பாட்டியைச் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கு வந்துள்ளார் எனவும், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் அந்த இளைஞரும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளால் கொல்லப்பட்டார் எனவும் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பள்ளிகளில் இதுவரை, 8 முறை மிகப் பயங்கரமான துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இதில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Comment