குடந்தை ஞானி & பணி. ஜான் பால்
திரு அவைக்கு 21 புதிய கர்தினால்கள்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 09 Jun, 2022
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே மாதம் 29 ஆம் தேதி 21 புதிய கர்தினால்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் உலகளாவிய திரு அவையின் பிரதிநிதிகளாகவும், பல்வேறு வகையான கலாச்சாரங்கள், சூழல்கள் மற்றும் மேய்ப்பு பணியை பிரதிபலிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்த 21 கர்தினால்களுள், இருவர் இந்திய திரு அவையைச் சேர்ந்தவர்கள். கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் பிலிப் நேரி ஃபெராவோ (69), ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் அந்தோனி பூளா (60) அவர்களும் கர்தினால்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 21 பேரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி வத்திக்கானில் பொறுப்பேற்கவுள்ளனர்.
ஐரோப்பாவிலிருந்து எட்டு பேரும், ஆசியாவிலிருந்து ஆறுபேரும், ஆப்பிரிக்காவிலிருந்து இருவரும், வட அமெரிக்காவிலிருந்து ஒருவரும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து நான்கு பேரும் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்சமயம் 229பேர் கர்தினால்களாக உள்ளனர்.
ஆந்திராவின் கர்தினால் அந்தோனி பூளா அவர்களையும், கோவாவின் கர்தினால் பிலிப் நேரி அவர்களையும் சேர்த்து தற்போது இந்தியாவிலிருந்து தற்போது ஆறு கர்தினால்கள் உள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 21 கர்தினால்களில் 16 பேர் 80 வயதுக்கு உட்பட்டவர்கள். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திரு அவையில் இருக்கின்ற 208 கர்தினால்களுள், 117 பேர் 80 வயதுக்குட்பட்டவர்கள். மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதியோடு, திரு அவையில் கர்தினால்களின் மொத்த எண்ணிக்கை 229 ஆகவும், இவர்களில் 80 வயதுக்குட்பட்டவர்கள் 133 ஆகவும் இருப்பர். இந்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை உள்ள 133 கர்தினால்களுள் 21 பேர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment