No icon

திருத்தந்தை

தொமினிக்கள் குடியரசில் பேராயர் எட்கார் பென்னா பாரா

கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான தொமினிக்கன் குடியரசின் அன்னையும், பாதுகாவலருமான அல்ட்டா கிராசியா (Altagracia) அருள்மிகப் பெற்ற அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூறாம் ஆண்டு யூபிலி விழாவை ஆகஸ்ட் 15, திங்களன்று நிறைவுசெய்த பேராயர் எட்கார் பென்னா பாரா  அவர்கள், அந்நாட்டினர் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் அன்பை அறிவித்தார்.

திருத்தந்தையின் பிரதிநிதியாக இந்த யூபிலி நிகழ்வுக்கு அந்நாட்டிற்குச் சென்றிருக்கும் திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத் துறையின் நேரடிச் செயலரான பேராயர் எட்கார் பென்னா பாரா  அவர்கள், தொமினிக்கள் குடியரசின் அருள்மிகப் பெற்ற அன்னை மரியாவுக்கு திருத்தந்தை அன்பளிப்பாக அனுப்பியிருந்த தங்க செபமாலை ஒன்றையும் அவ்வன்னையின் காலடிகளில் அர்ப்பணித்து செபித்தார்.

தொமினிக்கன் குடியரசின் ஒலிம்பிக் அரங்கத்திற்கு, பவனியாக கொண்டுவரப்பட்ட  அல்ட்டா கிராசியா அன்னை மரியா திருப்படத்தின் முன்பாக, இந்த யூபிலி ஆண்டு நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் எட்கார் பென்னா பாரா  அவர்கள், இந்தப் பக்திமிக்க பவனி, நற்செய்தியோடு நம் வாழ்வை ஒத்திணங்கச் செய்து, இயேசுவுக்கு நாம் சான்றுபகர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

அன்னை மரியாவைப் போன்று, நம் வாழ்விலும் உலகிலும் கிறிஸ்துவை வரவேற்போம் எனவும், சோதனைகளில் வீழ்ந்துவிடாதவாறு விழிப்புடனும், தியாகங்களை ஏற்பதில் உறுதியுடனும் இருப்போம் எனவும் பேராயர் எட்கார் பென்னா பாரா  அவர்கள் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

பேராயர் எட்கார் பென்னா பாரா  அவர்கள், ஆகஸ்ட் 18, வருகிற வியாழன் வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய தலைவர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment