 
                     
                திருத்தந்தை
கடவுள் அனைத்தையும் நடத்தி முடிக்கிறவர்
- Author குடந்தை ஞானி --
- Monday, 05 Sep, 2022
தம்மை நம்புகிறவர்களுக்கு அனைத்துக் காரியங்களையும் செய்து முடிக்கவல்ல கடவுளின் வல்லமை குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஞாயிறன்று மத்திய இத்தாலியிலுள்ள லிஅகுயிலா நகரில் நிறைவேற்றிய திருப்பலியில் எடுத்துரைத்தார்.
1294 ஆம் ஆண்டில் திரு அவையின் தலைமைப்பணியை ஏற்று ஐந்து மாதங்களே ஆன நிலையில், அப்பணியைத் துறந்த திருத்தந்தை புனித 5 ஆம் செலஸ்டின் அவர்களின் கல்லறை அமைந்துள்ள லிஅகுயிலா நகரின் கொலிமாஜியோ அன்னை மரியா பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனித திருத்தந்தை பலநேரங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார், அவ்வேளையிலும் அவர் துணிச்சலோடு நற்செய்திக்குச் சான்று பகர்ந்தார் என்று கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஞாயிறன்று லிஅகுயிலா நகரில் சிறப்பிக்கப்பட்ட, நிறைபேறு பலன்கள் வழங்கும் 728வது செலஸ்டின் மன்னிப்பு நிகழ்வுக்காக அந்நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு அப்பசிலிக்காவின் புனிதக் கதவையும் திருத்தந்தை பிரான்சிஸ் திறந்து வைத்தார். அந்நிகழ்வை முன்னிட்டு நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை புனித 5 ஆம் செலஸ்டின் அவர்கள் பற்றிக் குறிப்பிட்டு, கடவுளின் இரக்கம் நமக்கு விடுதலையளிக்கின்றது மற்றும் மகிழ்வைக் கொணர்கின்றது என்று கூறியுள்ளார். கடவுள் நம் தந்தை, நாம் அனைவரும் அவரால் அன்பு கூரப்படுகிறோம் என்ற நற்செய்தியை அறிவித்த புனிதர்களின் வாழ்வு நமக்கு முன்மாதிரிகையாய் உள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
திருத்தந்தை புனித 5 ஆம் செலஸ்டின் அவர்களின் கல்லறை லிஅகுயிலா நகரில் பாதுகாக்கப்பட்டு வருவதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனித திருத்தந்தை, தன்னையே தாழ்த்தியதன் வழியாக, கடவுளின் அன்பைப் பெற்றார் என்றும், தாழ்ச்சியாக இருப்பதன் சக்தியைத் தேர்ந்துகொள்வதைத் தவிர, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வேறு வழி கிடையாது என்றும் கூறியுள்ளார்.
தாழ்ச்சியின் மகத்துவம்
மனத்தாழ்ச்சியுடையோர், மனிதரின் கண்களுக்கு முன்னால் பலவீனமானவர்களாகத் தெரிகின்றனர். ஆனால், உண்மையில், அவர்களே வெற்றியாளர்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மற்றும் அவரது திட்டத்தை அறிந்திருப்பவர்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, தாழ்மையான உள்ளத்தவர்க்கே கடவுள் தம் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்றும் கூறியுள்ளார்.
மனிதரின் செயல்களாலோ அல்லது யுக்திகளாலோ அல்ல; மாறாக தாழ்மையுள்ளோரின் பலம் ஆண்டவரே! என்று உரைத்த திருத்தந்தை, பலநேரங்களில் தற்பெருமை ஆதிக்கம் செலுத்திவரும் இன்றைய உலகில், கனிவும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாக மாறவும், கடவுள் எல்லாவற்றையும் நடத்தி முடிப்பவர் என்பதில் நம்பிக்கை கொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மகிழ்வும் இரக்கமும்
இறைமகனான கிறிஸ்து மற்றும் அவரது இரக்கத்தால் எப்போதும் ஈர்க்கப்பட தங்களைக் கையளிக்குமாறு அந்நகர் மக்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் இரக்கத்தினால் மட்டுமே அனைவரும் மகிழ்வோடு வாழமுடியும் என்ற உண்மையை திருத்தந்தை புனித 5 ஆம் செலஸ்டின் அவர்கள் நமக்கு கொடையாக விட்டுச்சென்றுள்ளார். அதனை அந்நகர் மக்கள் நூற்றாண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர் என்று அவர்களைப் பாராட்டியுள்ளார்.
இத்தலத்திரு அவை, ஆண்டில் ஒருமுறை மட்டுமல்ல; எப்போதும் மன்னிப்பின் திரு அவையாக இருக்கவேண்டும் என்று மறையுரையின் இறுதியில் கூறியத் திருத்தந்தை, 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற கடுமையான நிலநடுக்கத்தால் லிஅகுயிலா நகர மக்கள் அதிகத் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். அதேநேரம், ஆன்மாவின் நிலநடுக்கம் என்ற மற்றொரு வகையான துன்பம் உள்ளது என்பதையும் குறிப்பிட்டு, எப்போதும் தாழ்மையான உள்ளத்தைக் கொண்டிருக்குமாறு ஊக்கப்படுத்தினார்.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment