கர்தினால்களோடு கலந்துரையாடல்
திரு அவையில் ஒன்றிணைந்த பயணத்தின் முக்கியத்துவம்
- Author குடந்தை ஞானி --
- Monday, 05 Sep, 2022
திரு அவையில் ஒன்றிப்பு நிலவவேண்டியதன் முக்கியத்துவம், கடவுள் அனைவர்மீதும் வைத்துள்ள அன்பிற்கு மறைப்பணி வழியாகச் சான்றுபகரத் திரு அவைக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, திரு அவையில் பொதுநிலையினரின் பங்கு போன்ற தலைப்புகளில், திருத்தந்தை பிரான்சிஸ். அவர்கள், கர்தினால்களோடு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
அண்மையில் வெளியிடப்பட்ட, திருப்பீட தலைமையகத்தின் சீர்திருத்தம் பற்றிய Praedicate Evangelium என்ற புதிய திருத்தூது கொள்கைத் திரட்டை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 197 கர்தினால்களோடு, ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாள்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
வத்திக்கானில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள உலக ஆயர்கள் மாமன்ற அறையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் நிறைவாக, 30 ஆம் தேதி செவ்வாய் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கர்தினால்கள் அனைவரும் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். மேலும், திரு அவையில் பொதுநிலையினரின் பங்கு குறித்து, கர்தினால்கள் மொழிவாரியாக கலந்துரையாடிய கருத்துகள், பரிந்துரைகள், கேள்விகள் ஆகியவை பற்றி, ஆகஸ்டு 30 ஆம் தேதி, செவ்வாய் காலையில் நடைபெற்ற முதல் அமர்வில், கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன. 29 ஆம் தேதி திங்களன்று நடைபெற்ற முதல் அமர்வு குறித்து வத்திக்கான் செய்திகளிடம் பேசிய, உரோம் இறையன்பு பங்குத்தளப் பொறுப்பாளராகிய, இத்தாலிய கர்தினால் என்ரிக்கோ பெரோசி அவர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்புகூர்வதற்குச் சான்றுபகர்தல், இன்றைய சமுதாயம் நற்செய்திக்குத் திறந்தமனதாய் இருப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்கும் வழிகள் போன்றவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என்று கூறியுள்ளார்.
திருப்பீட தலைமையகத்திற்கும், மறைமாவட்டங்களுக்கும் இடையே உரையாடல் மற்றும் செவிமடுத்தல் இருக்கவேண்டியதன் அவசியம், திரு அவையில் உடன்பிறந்த உணர்வு மேலோங்க வேண்டியதன் தேவை, நற்செய்தி அறிவிப்புப்பணி போன்ற தலைப்புகளிலும் கர்தினால்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர் என்று, பிரேசில் நாட்டின் அமேசான் பகுதியான மனாவுஸ் பேராயர் கர்தினால் லியானார்டோ ஸ்டெய்னெர் அவர்கள் கூறியுள்ளார். திரு அவையிலுள்ள மொத்த 226 கர்தினால்களுள் 197 பேர், இந்த இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Comment