 
                     
                கர்தினால் ஜீன் கிளாடி
தூய ஆவியாரே ஆயர்கள் மாமன்றத்தை நடத்துபவர்
- Author குடந்தை ஞானி --
- Monday, 05 Sep, 2022
திரு அவையில் ஒன்றிணைந்த பயணம் என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தை தூய ஆவியாரே வழிநடத்திச் செல்வார் என்று, ஆகஸ்ட் 26 ஆம் தேதி, வெள்ளியன்று வத்திக்கானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கர்தினால் ஜீன் கிளாடி தெரிவித்தார்.
கத்தோலிக்கத் திரு அவையில் 2023 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்து பயணம் என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின், உலகளாவிய தயாரிப்பின் இரண்டாவது நிலை தொடங்கவிருப்பது குறித்தும், அதன் முதல்நிலை தயாரிப்பு நடைபெற்ற முறை குறித்தும் இவ்வெள்ளியன்று கர்தினால் ஜீன் கிளாடி விளக்கியுள்ளார்.
வத்திக்கானில் 2023 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 16 வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் பேச்சாளரான, பெல்ஜிய நாட்டு கர்தினால் ஜீன் கிளாடி அவர்கள், உலக அளவில் 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய முதல்நிலை தயாரிப்புகளின் நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகள் வத்திக்கானுக்கு வந்துள்ளன என்று கூறியுள்ளார். 114 ஆயர் பேரவைகளில் 98 விழுக்காடு, இந்த தயாரிப்பு நடவடிக்கைக்கு மாமன்றக் குழு அல்லது தொடர்பாளர் ஒருவரை நியமித்துள்ளது என்றும், மறைமாவட்டங்கள் அனுப்பியுள்ள தொகுப்புகள், அங்கு நடத்தப்பட்ட அமர்வுகளில் செவிமடுத்தல் மிகச் சிறப்பாக நடைபெற்றதை வெளிப்படுத்துகின்றன எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார். பங்குத்தளங்கள், பக்த அமைப்புகள், இயக்கங்கள், துறவு சபைகள், கத்தோலிக்கப் பள்ளிகள், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் இந்த தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதை உணர முடிகின்றது எனவும் கர்தினால் ஜீன் கிளாடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment