No icon

செப்டம்பர் 04

அருளாளராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

கத்தோலிக்கத் திரு அவையின் திருத்தந்தையாக 33 நாள்களே ஆற்றிய இறை ஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 04 ஆம் தேதி, ஞாயிறன்று அருளாளராக அறிவித்தார். வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியில், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.

அல்பினோ லூசியானி என்ற இயற்பெயரைக்கொண்ட இத்தாலியரான திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் பற்றி கூடுதலாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கென்று, அவரது போதனைகள், ஆழமான ஆன்மீகம், இறையியல் கருத்துக்கள் போன்றவை குறித்து, கர்தினால் பெனியமினோ ஸ்டெல்லா அவர்கள் தலைமையிலான குழு ஒன்று, செப்டம்பர் 02 ஆம் தேதி, வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது.

இன்றைய உலகிற்கு இத்திருத்தந்தையின் செய்தி மிகவும் முக்கியம் என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் கூறிய இக்கூட்டத்தில், இத்திருத்தந்தையின்  உறவினரான லீனாபெட்ரி அவர்களும், இத்திருத்தந்தையின் இறந்த உடலை முதன் முதலில் பார்த்த குழந்தை மரியா சபையைச் சேர்ந்த அருள்சகோதரி மாரின் அவர்களும், இத்திருத்தந்தை குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு உதவி வேண்டுகையாளராகப் பணியாற்றிய பாலஸ்கா அவர்கள் பேசுகையில், திருத்தந்தை முதலாம் யோவான் பவுலைப் பற்றி, வத்திக்கான் அமைப்பு சேகரித்த ஆவணங்கள், இத்திருத்தந்தையின் வாழ்க்கை வரலாறு குறித்து சரியாக அலச முடிந்தது என்று கூறியுள்ளார். இத்திருத்தந்தை குறித்து நடைபெற்ற அறிவியல் ஆய்வுகள், நஞ்சு கொடுக்கப்பட்டதால் இவர் இறந்தார் என நீண்ட பற்றி, காலமாகப் பரவிவந்த போலிச் செய்திகளுக்கு ஒரு முடிவைத் தந்துள்ளன என்று கூறிய பாலஸ்கா அவர்கள், இத்திருத்தந்தையின் இறப்பு குறித்து, குறிப்பாக, இவரது இறப்புக்குரிய காரணம் குறித்து அறிவிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் பற்றியும் விளக்கினார்.

இத்திருத்தந்தையின் உடல் ஏன் பரிசோதனை செய்யப்படவில்லை என சிலர் கேட்கின்றனர். 1983 ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல் அவர்கள் இது தொடர்பான சட்டம் ஒன்றைக் கொண்டுவரும்வரை, அவ்வாறு செய்வதற்கு சட்டம் ஏதும் இல்லை எனவும் பாலஸ்கா அவர்கள் கூறியுள்ளார்.

Comment