“The Letter”
சுற்றுச் சூழல் ஆவணப்படத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
- Author குடந்தை ஞானி --
- Friday, 14 Oct, 2022
அக்டோபர் 04 ஆம் தேதி, வத்திக்கானில் திரையிடப்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த “The Letter” (திருமடல்) என்ற ஆவணப்படம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூழலியல் பாதுகாப்புக்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பதிவுசெய்துள்ளது.
ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், ஒரு பூர்வீக இனத் தலைவர், காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்ந்துள்ள ஒருவர், உலகின் கடைஎல்லைகளுக்குப் பயணம் மேற்கொண்டு இறுதியில் வத்திக்கானுக்கு வருகைதந்த கடல் உயிரியல் தம்பதியர் ஆகிய அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் பேசுவது இந்த ஆவணப்படத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வத்திக்கானின் உலக ஆயர்கள் மாமன்றத்தின் புதிய அறையில் திரையிடப்பட்ட “The Letter” ஆவணப்படத்தை, அக்டோபர் 04 ஆம் தேதி முதல் யுடியூப் சமூக ஊடகத்தில் (YouTube Oringinals) பார்த்து மகிழலாம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும் காணொளிகளோடு தொடங்குகின்ற இந்த ஆவணப்படத்தில், 2013 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திரு அவையின் தலைமைப்பணியை ஏற்ற நிகழ்வு பற்றி இதுவரை ஒருபோதும் பார்த்திராத படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆவணப்படத்திற்கு இடப்பட்டுள்ள தலைப்பு, திருத்தந்தையின் சில செய்திகளைக் கொண்ட “encyclical” அதாவது திருமடல் என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த தலைப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015 ஆம் ஆண்டில் வெளியிட்ட Laudato si' (இறைவா உமக்கே புகழ்) என்ற திருமடலைக் குறிக்கின்றது.
காலநிலை மாற்றம் குறித்த, ஐ.நா. மற்றும் பாரிஸ் ஒப்பந்தங்களை வத்திக்கான் ஏற்பதை திருப்பீடம் முறைப்படி அறிவித்ததைக் குறிக்கும் விதமாக, அக்டோபர் 04 ஆம் தேதி, செவ்வாயன்று இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Comment