 
                     
                16வது உலக ஆயர்கள் மாமன்றம்
உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது நிலை வரைவு ஏடு
- Author குடந்தை ஞானி --
- Friday, 14 Oct, 2022
“கூட்டியக்கப் பயணம்” என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது நிலை தயாரிப்பு வரைவுத்தொகுப்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்நிலை தயாரிப்பாக, 2021 ஆம் ஆண்டில் உலகெங்கும் மறைமாவட்ட அளவில், இறைமக்கள் அனைவரின் பங்கேற்போடு நடைபெற்ற கலந்துரையாடல்கள், பகிர்வுகள், பரிந்துரைகள் ஆகிய அனைத்தையும் குறித்து, உரோம் புறநகரிலுள்ள பிராஸ்கேட்டியில் உலகின் ஏறத்தாழ ஐம்பது வல்லுநர்கள் 12 நாள்களாக கலந்தாய்வு நடத்தி, கண்டங்கள் அளவில் இடம்பெறும் இரண்டாவது நிலைக்குரிய வரைவுத்தொகுப்பை தயாரித்தனர். அத்தொகுப்பை, அக்டோபர் 2 ஆம் தேதி, ஞாயிறன்று அவ்வல்லுநர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து சமர்ப்பித்துள்ளனர்.
இச்சந்திப்பின்போது இவ்வரைவுத்தொகுப்பு குறித்து, திருத்தந்தையிடம் விவரித்த, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலரான கர்தினால் கிரெக் கோக் அவர்கள், இறைமக்களில் தூய ஆவியார் பணியாற்றியுள்ள தனித்துவமிக்க அனுபவத்தை, தெளிந்துதேர்ந்த இக்கலந்துரையாடல்களில் கண்டறிந்தோம் என்று கூறியுள்ளார். ஆண்டவர் நம்மில் செயலாற்றும் விந்தைகளை அறியமுடிந்தது என்றும், திரு அவை உண்மையிலேயே அனைவருக்குமுள்ள ஓர் இல்லமாக தன்னையே வழங்குகிறது மற்றும் திரு அவை உண்மையிலேயே அனைவரையும் வரவேற்கும் ஓர் இடமாக இருக்கின்றது என்பதை எம்மால் கூற முடியும் என்றும், கர்தினால் கோக் (Koch) அவர்கள் திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.
ஆயர் பேரவைகள், கிழக்குவழி மரபு திருஅவைகள், துறவு சபைகள், திரு அவை கழகங்கள், இயக்கங்கள் என, அனைத்து இடங்களிலிருந்தும் திருப்பீடத்திற்கு வந்திருந்த முதல்நிலை தயாரிப்புகள் அனைத்தையும் 114 தொகுப்புகளாக அமைத்து அவற்றில் 112 குறித்து வல்லுநர்கள், ஓர் ஆன்மீகச் சூழலில் கலந்தாய்வு செய்து, இரண்டாவது நிலை தயாரிப்புக்குரிய வரைவுத் தொகுப்பை திருத்தந்தையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் என இக்கலந்தாய்வை மேற்கொண்ட குழுவோடு, 15வது உலக ஆயர்கள் மாமன்ற அவையின் உறுப்பினர்களும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இணைந்து செயலாற்றினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் கண்டங்கள் அளவில் நடைபெறும் இரண்டாவது நிலை தயாரிப்புக்குரிய வரைவுத்தொகுப்பு, இத்தாலியம் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு இம்மாதம் பாதியில் அனைத்து ஆயர்களுக்கும் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment