No icon

திருமணங்களும் குடும்பங்களும் எதிர் நோக்கும் பிரச்சனைகள்

அழிவை அல்ல, நம்பிக்கையை முன்னுரைப்பவர்கள் கிறிஸ்தவர்கள்

இந்த மூவாயிரமாம் ஆண்டின் துவக்கத்தில் திருமணங்களும் குடும்பங்களும் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு சரியான முறையில் பதில் வழங்க புனித திருத்தந்தை யோவான் பவுல் இறையியல் நிறுவனம் ஆற்றிவரும் பணிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

1981 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் துவக்கப்பட்டு இன்று திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் பலன்தரும் வகையில் இந்த நிறுவனம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டுவதாக, அக்டோபர் 24 ஆம் தேதி, திங்கள்கிழமை இந்நிறுவனத்தின் திருமணம் மற்றும் குடும்ப அறிவியல்கள் பற்றிய கல்வி கழக அங்கத்தினர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

பெற்றோர்களுக்குரிய பொறுப்புடன் வாழ்தல், திருமணத்தில் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருத்தல், உலகில் உடன்பிறந்த உணர்வுடன் செயல்படுதல் போன்றவைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இன்றைய சிக்கல்களை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, இறைவனின் ஞானம், மற்றும் கருணையின் அடையாளங்களைப் புரிந்துகொண்டு, அதற்கியைந்தவகையில் கவனமுடன் தேர்ந்து தெளிவு பெறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவர்கள் என்பவர்கள் அழிவை முன்னுரைப்பவர்கள் அல்ல மாறாக, நம்பிக்கையை முன்னுரைப்பவர்கள் என்பதால், நெருக்கடிகளின் காரணத்தை ஆராய்ந்து அதற்கான விடைகளை நம் குடும்ப உறவுகளிடமிருந்தும் கண்டுகொள்ள முன்வரவேண்டும் என்ற விண்ணப்பமும் திருத்தந்தையால் முன்வைக்கப்பட்டது

திருமணம் மற்றும் குடும்பம் கொண்டிருக்கும் தரத்தைச் சார்ந்தே, தனிமனிதர்களின் அன்பும், சமூகத்தின் உறவுப் பிணைப்பும் உள்ளன என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனால் குடும்பங்களுக்கு செவிமடுக்க வேண்டிய திருஅவை மற்றும் அரசுகளின் கடமைகளையும் சுட்டிக்காட்டினார்.  

Comment